செய்திகள்
புகார்

அமைந்தகரையில் திருநங்கை பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை

Published On 2021-07-20 08:31 GMT   |   Update On 2021-07-20 08:31 GMT
சென்னை அமைந்தகரையில் திருநங்கை பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் கடந்த 2018-ம் ஆண்டு சுபஸ்ரீ என்ற திருநங்கை காவல்துறையில் வேலைக்கு சேர்ந்தார்.

அப்போதைய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் அவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர் தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சட் டம்-ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார். நேற்று இரவு வீட்டில் சிலிண்டர் காலி ஆனதால் உணவு ஆர்டர் செய்து இருந்தார். அதனை வாங்குவதற்காக நள்ளிரவு 12.30 மணியளவில் அமைந்தகரை அண்ணா ஆர்ச் அருகில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பெண் போலீஸ் சுபஸ்ரீ நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் அவரிடம் வந்து கழிவறை எங்கு இருக்கிறது என்று கேட்டு செக்ஸ் தொல்லை கொடுத்தனர்.

அப்போது திருநங்கை பெண் போலீஸ் சுபஸ்ரீயின் இடுப்பை கிள்ளியும் 3 பேரும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர் நான் அமைந்தகரை காவல் நிலையத்தில்தான் வேலை பார்க்கிறேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று கூறி உள்ளார்.

பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுபற்றி சுபஸ்ரீ அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுபஸ்ரீக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களில் ஒருவர் பெயர் கணேசன் என்பதும் அமைந்தகரை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.

இவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுபஸ்ரீ அளித்த புகாரில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து இன்று போலீஸ்காரர் கணேசன் மற்றும் அவருடன் சென்ற நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

இதன் பிறகு காவலர் கணேசன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News