குழந்தை பராமரிப்பு
தேர்வு

ஆங்கில அறிவை சோதிக்கும் ‘டோபல்’ தேர்வும், அதன் தனித்துவமும்...

Published On 2022-03-05 07:31 GMT   |   Update On 2022-03-05 07:31 GMT
ஒரு மாணவரின், ஆங்கில மொழித் திறமையினை, படித்தல், பேசுதல், எழுதுதல் மற்றும் கவனித்தல் ஆகிய அம்சங்களில் இத்தேர்வு அளவிடுகிறது. மேற்கூறிய திறன்கள்தான், ஒரு மாணவர், வகுப்பறையில் சிறந்து விளங்க தேவையானவை.
ஒரு மாணவரின் ஆங்கில மொழித்திறனை சிறப்பாக அளவிட விரும்பும் கல்வி நிறுவனங்களுக்கு, ஏறக்குறைய 50 வருடங்களாக ‘டோபல் தேர்வு’ என்பது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஒரு மாணவரின், ஆங்கில மொழித் திறமையினை, படித்தல், பேசுதல், எழுதுதல் மற்றும் கவனித்தல் ஆகிய அம்சங்களில் இத்தேர்வு அளவிடுகிறது. மேற்கூறிய திறன்கள்தான், ஒரு மாணவர், வகுப்பறையில் சிறந்து விளங்க தேவையானவை.

ஒரு மாணவர், ஏதேனும் ஒரு பத்தியை படித்துக் காட்டுமாறு கேட்கப்படலாம் மற்றும் அதே தலைப்பில், ஒரு விரிவுரையை கேட்குமாறு சொல்லப்படலாம் மற்றும் இரண்டையும் இணைத்து, பேசுமாறோ அல்லது எழுதுமாறோ கேட்கப்படலாம்.

டோபல் தேர்வு என்பது, நடைமுறை வாழ்வுக்கு தேவையான ஆங்கிலத் திறன்களை மதிப்பிடுகிறது. எனவே, வகுப்பறை செயல்பாட்டில் தேவைப்படும் திறன்கள் எவை என்பதை பற்றி மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

வேறு எந்த ஆங்கில மொழித்திறன் தேர்வுகளை விடவும், டோபல் தேர்வே, உலகெங்கிலும் அதிகளவில் ஏற்கப்படும் ஒன்றாக திகழ்கிறது. இன்றைய நிலையில், 130-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, 8500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், இத்தேர்வை ஏற்றுக்கொள்கின்றன மற்றும் அவைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.

உலகளாவிய அளவில், ஏராளமான கல்வி நிறுவனங்களால், இத்தேர்வு ஏற்கப்படுவதால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளின் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் மாணவர்கள், இத்தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது. இதனால், ஒரு மாணவருக்கு நேரமும், உழைப்பும் மிச்சமாகிறது. மொத்தம் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில், 4500-க்கும் மேற்பட்ட டோபல் தேர்வு மையங்கள் உள்ளன. அரை நாளில், மாணவர்கள், மதிப்பீட்டை நிறைவு செய்ய முடியும். எனவே, கூடுதலாக, தங்குமிடம் மற்றும் போக்குவரத்திற்கு செலவு செய்ய வேண்டியதில்லை.

சர்வதேச மதிப்பில் 165 டாலர்களும், இந்திய மதிப்பில் ரூ.7,500-ம் செலவாகிறது. இந்திய மாணவர்கள் விரும்பினால், ஆன்லைன் பதிவு அமைப்பின் மூலமாக, பணமாகவே, கட்டணத்தை செலுத்தும் வசதி, தற்போது செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், தேர்வு தேதியை மாற்ற விரும்பினாலோ, மறுமதிப்பீட்டிற்கு கோரினாலோ, கூடுதல் மதிப்பெண் பட்டியல் தேவைப்பட்டாலோ, அவைகளுக்கான கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

என்ன ஸ்பெஷல்?

டோபல் தேர்வை அங்கீகரிக்கும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை, பிற தேர்வுகளை விட மிகவும் அதிகம். இத்தேர்வு, ஒரு மாணவரின் ஆங்கிலத் திறனை, மிக நுட்பமாக அளவிடுகிறது. வாசித்தல் மற்றும் சுருக்கி எழுதுதல் போன்ற நடைமுறை உலகின் கல்வி சவால்களை இத்தேர்வு பிரதிபலிக்கிறது. மேலும், டோபல் தேர்வானது, சோதிப்பது மற்றும் அதை குறிப்பெடுப்பது போன்ற செயல்பாடுகளினால் தனித்துவம் பெறுகிறது. இதன் மூலம், மதிப்பெண் வழங்கும் செயல்முறையானது, நேர்மையாக நடப்பது, உறுதி செய்யப்படுகிறது.

மதிப்பெண் செயல்முறையானது, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக பின்பற்றப்படுகிறது. இதைத்தவிர, டோபல் மதிப்பாய்வு செயல்பாடானது, ஒவ்வொரு தேர்வருக்கும், பலவிதமான மதிப்பீட்டாளர்களின் மதிப்புரைக்கு அனுப்பப்படுகிறது. இதன்மூலம், ஒரே நபரின் கருத்தின் மூலம் முடிவு செய்வது தவிர்க்கப்படுகிறது. உதாரணமாக, பேசுதல் பகுதியானது, 3 முதல் 6 ஆங்கிலப் புலமையுள்ள நிபுணர்களால் மதிப்பிடப்படுகிறது.

இத்தேர்வில் பின்பற்றப்படும், மனிதர் மற்றும் தானியங்கி மதிப்பெண் முறையால், இதன் மதிப்பிடும் முறை, மிகவும் தரமானதாகவும், நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறது. இதன் மூலம், டோபல் தேர்வில் ஒருவர் பெறுகின்ற மதிப்பெண், உண்மையிலேயே, அவரின் திறமைக்கு கிடைத்ததுதான் என்பதை எளிதாக உறுதி செய்யலாம்.
Tags:    

Similar News