செய்திகள்
கோப்புபடம்

திருச்செந்தூரில் சாலைகள் மூழ்கியதால் 2-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு

Published On 2019-12-02 12:08 GMT   |   Update On 2019-12-02 12:08 GMT
தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூர் சாலை தண்ணீரால் மூழ்கியதையடுத்து 2-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர்:

குமரி கடல்பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழைபெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாபநாசம் அணை அதன் முழு கொள்ளவான 143 அடியை எட்டியது.

ஸ்ரீவைகுண்டம் தென்கால் பாசனமான கடம்பாகுளம் மற்றும் அதன் கீழ் உள்ள 14 குளங்களும் முழுவதும் நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. இந்த நிலையில் திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஆவுடையார்குளம், நா.முத்தையாபுரத்தில் உள்ள எல்லப்பநாயக்கன் குளம் முழுவதும் நிரம்பியது. இதன் உபரிநீரானது வாய்க்கால் வழியாக திருச்செந்தூர் பிரதான சாலைகளான காமராஜர் சாலை, டி.பி.ரோடு வழியாக சென்று கடலில் கலக்கிறது.

இந்த சாலைகள் வழியாக செல்லும் உபரிநீர் வாய்க்கால் முழுவதும் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சாலைகள் வழியாக தான் அரசு மருத்துவமனை மற்றும் கோவிலுக்கு செல்ல வேண்டி இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சாலைகள் முழுவதும் பழுதடைந்தது குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்கள் பழுதடைந்தது வருகிறது.

பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட இந்த உபரிநீர் செல்லும் வாய்க்கால் 50 வருடங்களாக தூர்வாரி, கரையை பலப்படுத்தப்படாமல் உள்ளது. எனவே வாய்க்கால் நிரம்பி மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது மிதமான மழைபெய்து வருவதால் தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். புறநகர் பகுதிகளான பி.டி.ஆர்.நகர், ஜெயந்திநகர், ராஜ்கண்ணாநகர், கோகுல்நகர் மற்றும் குமாரபுரம் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

Tags:    

Similar News