செய்திகள்
கைது

போலியான ரெயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது

Published On 2021-02-20 01:51 GMT   |   Update On 2021-02-20 01:51 GMT
திருவொற்றியூரில் சட்டவிரோதமாக ரெயில்வே ‘இ-டிக்கெட்டுகளை’ முன்பதிவு செய்து, விற்பனை செய்த 2 பேரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ரூ.15 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை:

ரெயில் டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக முன்பதிவு செய்து, அதனை சில தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக தெற்கு ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து தெற்கு ரெயில்வே எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ரெயில்வே பாதுகாப்பு படையினர் தனிப்படை அமைத்து சட்டவிரோதமாக ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து, அவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை திருவொற்றியூரில் 2 கடைகளில் சட்டவிரோதமாக ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்று வந்ததாக சென்னை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தண்டையார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் சிறப்பு தனிப்படையினரும் அந்த பகுதியில் உள்ள கடைகளில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு 2 இடங்களில் டிராவல் ஏஜென்சி நிறுவனம் வைத்து டிக்கெட் முன்பதிவு செய்து வந்த வினோதன் என்பவர், 15-க்கும் மேற்பட்ட நபர்களின் முகவரியை வைத்து போலியான ‘இ-டிக்கெட்டுகளை’ விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, வினோதன் மற்றும் அவரது கடையில் பணி புரிந்து வந்த ஹரிகரன் என்ற ஊழியரையும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 1,500-க்கும் மேற்பட்ட முன்பதிவு செய்த ரெயில் டிக்கெட்டுகளும், செல்போன்கள் மற்றும் 2 கம்ப்யூட்டர்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும், கடந்த 3 மாதங்களில் இதுபோன்ற போலியான ரெயில் ‘இ-டிக்கெட்டுகளை’ விற்பனை செய்த நபர்கள் சுமார் 50 பேரை கைது செய்து, சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான ரெயில்வே ‘இ-டிக்கெட்டுகளை’ ரெயில்வே தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News