செய்திகள்
சுதாகரன்

இன்று அபராத தொகை கட்டுகிறார்- சொத்து குவிப்பு வழக்கில் சுதாகரன் நாளை விடுதலை

Published On 2020-12-22 09:07 GMT   |   Update On 2020-12-22 09:07 GMT
சுதாகரன் இன்று தனது அபராத தொகையை செலுத்துகிறார். அபராதம் கட்டப்பட்ட விவரம் கோர்ட்டு மூலம் சிறைத்துறைக்கு தெரிவிக்கப்பட்டவுடன் அவர் விடுதலை செய்யப்படலாம் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேர் கர்நாடக மாநில பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 10 கோடியே 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த தொகையை கடந்த மாதம் சசிகலா, இளவரசி ஆகியோர் செலுத்தினர். சசிகலா ஏற்கனவே இதே வழக்கு தொடர்பாக 48 நாட்கள் சிறையில் இருந்ததை கழிக்க வேண்டும், அவர் சிறையில் இருந்தபோது கன்னட மொழி கற்றுக் கொண்டுள்ளார். இதை நன்னடத்தையாகக் கருதி தண்டனை காலம் முடிவதற்கு முன் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கர்நாடக மாநில சிறைத் துறை டி.ஜி.பி. மற்றும் பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கடந்த மாதம் 19-ந் தேதி அவரது வக்கீல்கள் மனு கொடுத்தனர். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் சசிகலா அடுத்த மாதம் 27-ந் தேதி இரவு 9.30 மணிக்கு விடுதலை செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே வேளையில் இளவரசி 5 நாள் பரோலில் வந்ததை கழித்தால் பொங்கலுக்கு முன்பு விடுதலை ஆவதற்கான‌ வாய்ப்புகளும், சுதாகரன் சுமார் 4 மாதம் காலம் சிறையிலிருந்ததை கழித்தால் இந்த மாதத்திலும் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் சொத்து வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய சுதாகரனின் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றது. ஏற்கனவே 92 நாட்கள் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டி, சுதாகரன் மனு அளித்து இருந்தார். இதையடுத்து நீதிமன்றம் சுதாகரனை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து சுதாகரன் இன்று தனது அபராத தொகையை செலுத்துகிறார். இதுபற்றி சுதாகரன் தனது வழக்கறிஞர்கள் மூலம் சிறைத்துறைக்கும், உள் துறைக்கும் மனு அனுப்பினர். இந்த மனுவுக்கு பதில் அனுப்பி உள்ளது. இதை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக அபராதம் கட்டப்பட்ட விவரம் கோர்ட்டு மூலம் சிறைத்துறைக்கு தெரிவிக்கப்படும்.

இந்த நடைமுறைகள் நடைபெற இன்று இரவு வரை ஆகலாம் என்று கருதப்படுகிறது. தகவல் கிடைத்ததும் சுதாகரன் நாளை விடுதலை செய்யப்படலாம் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News