ஆட்டோமொபைல்
பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் கிரான் கூப்

விரைவில் இந்தியா வரும் பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் கார்

Published On 2020-03-27 11:23 GMT   |   Update On 2020-03-27 11:23 GMT
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 8 சீரிஸ் கிரான் கூப் மாடல் கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 8 சீரிஸ் கிரான் கூப் மாடல் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய ஆடம்பர கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் கிரான் கூப் மாடல் சமீபத்தில் நடந்து முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்தியாவில் புதிய எக்ஸ்7 மாடல் வெளியானதும் பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்படும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கொரொனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. 

சர்வதேச சந்தையில் பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் மாடல்: கூப், கன்வெர்டிபில் மற்றும் நான்கு கதவுகள் கொண்ட கிரான் கூப் என மூன்றுவித பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது. இவற்றில் கிரான் கூப் வெர்ஷன் மட்டுமே இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது டாப் எண்ட் எம்8 வேரியண்ட் ஆக இருக்கும் என தெரிகிறது.



இந்தியாவில் புதிய பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் மாடலில், 840ஐ 6 டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 340 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டாப் எண்ட் எம்8 மற்றும் எம்8 காம்படீஷன் மாடல்களில் 4.4 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. 

இவற்றில் எம்8 மாடல் 590 பி.ஹெச்.பி. பவர் மற்றும் எம்8 காம்படீஷன் மாடல் 616 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. 

பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் கிரான் கூப் மாடல் தற்போதைய பிளாக்‌ஷிப் மாடலான 7 சீரிஸ் மாடலுக்கு மேல் நிலைநிறுத்தப்படும். இந்திய சந்தையில் அறிமுகமானதும் புதிய பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் கிரான் கூப் மாடல் போர்ஷ் பனமெரா மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.டி. 4-டோர் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
Tags:    

Similar News