செய்திகள்
சீன அதிபரை வழியனுப்பும் பிரதமர் மோடி

மாமல்லபுரத்தில் இரவு விருந்து முடித்து கிண்டி திரும்பினார் ஜின்பிங்

Published On 2019-10-11 16:53 GMT   |   Update On 2019-10-11 16:53 GMT
சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தார். இரவு விருந்து முடிந்ததும் மாமல்லபுரத்தில் இருந்து காரில் கிண்டி திரும்பினார் ஜின்பிங்.
சென்னை:

மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதம்ர் நரேந்திர மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் வரவேற்றார்.

சீன அதிபருக்கு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களின் தொன்மையையும், பெருமையையும் விளக்கி கூறினார் மோடி, தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை இருவரும் கண்டு களித்தனர். மேலும், நடனக் கலைஞர்களுடன் இரு நாட்டு தலைவர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட நாச்சியார் கோவில் விளக்கு மற்றும் தஞ்சாவூர் ஓவியம் ஆகியவற்றை சீன அதிபருக்கு பிரதமர் மோடி நினைவுப் பரிசாக வழங்கினார்.

அதன்பின்னர், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் தமிழகத்தின்  சாம்பார், தக்காளி ரசம், குருமா, கவன் அரிசி பாயாசம் உள்ளிட்ட சைவ, அசைவ உணவுகள் வழங்கப்பட்டன. விருந்துக்கு பிறகு இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். 

அதன்பின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை காரில் வழியனுப்பி வைத்தார் பிரதமர் மோடி. மாமல்லபுரத்தில் இருந்து காரில் புறப்ப்பட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு திரும்பினார். 
Tags:    

Similar News