செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

எதிர்க்கட்சி வலியுறுத்தலால் இம்ரான்கான் ராஜினாமா செய்வாரா?

Published On 2019-10-24 20:22 GMT   |   Update On 2019-10-24 20:22 GMT
எதிர்க்கட்சியின் போராட்டத்தால் ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை, நான் ராஜினாமா செய்ய முடியாது என பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.6 லட்சம் கோடியில் இருந்து ரூ.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பொருளாதார பிரச்சினையை சரிகட்ட முடியாமல் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு திணறி வருகிறது. இதை காரணம் காட்டி பிரதமர் இம்ரான்கான் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜாமியத் உலிமா இஸ்லாம் பாசில் கட்சி, பிரதமர் இம்ரான்கானை பதவி விலகக்கோரி ‘ஆசாதி மார்ச்’ என்ற பெயரில் நாடு முழுவதும் பிரமாண்ட போராட்டத்தை இம்மாத இறுதியில் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைவரான பஸ்லர் ரஹ்மான், “போலியான தேர்தலின் மூலம் இம்ரான்கானின் அரசு ஆட்சிக்கு வந்தது என்றும் அதனை கவிழ்க்க மக்கள் அணிதிரள வேண்டும்” என்றும் கூறி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சட்டம்-ஒழுங்கை சீர்கெடுக்காத வகையில் கோர்ட்டு அறிவுறுத்தலின்படி எதிர்க்கட்சிகள் போராட்டத்தை நடத்த பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் எதிர்க்கட்சியின் போராட்டம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இம்ரான்கான் “ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் ராஜினாமா செய்ய முடியாது” என்று பதிலளித்தார்.

மேலும் அவர், “எதிர்க்கட்சிகளின் பிரச்சினை என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஆனால் அவர்களது போராட்டத்துக்கு வெளிநாட்டு சக்திகளின் ஆதரவு இருக்கிறது என்பதை நான் அறிவேன்” என கூறினார்.
Tags:    

Similar News