செய்திகள்

நகர பகுதியில் வயல்களை அழித்து வீடுகட்டுவதால் வெப்பம் அதிகரித்து வருகிறது - ரமணன்

Published On 2019-03-25 10:17 GMT   |   Update On 2019-03-25 10:17 GMT
நகர பகுதியில் வயல்களை அழித்து வீடுகட்டுவதால் வெப்பம் அதிகரித்து வருகிறது என்று முன்னாள் வானிலை இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார். #MeteorologistRamanan

கும்பகோணம்:

சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவர்கள் செய்தித்தாள்களை படித்து குறிப்பெடுத்து கொள்ள வேண்டும். செல்போன் பயன்பாட்டை மாணவிகள் முழுவதும் குறைக்க வேண்டும். தமிழகத்தில் கல்வியின் தரத்தில் இன்னும் அதிகளவில் முன்னேற்றம் கொண்டுவர வேண்டும். ஒரே நாளில் படித்து ஐ.ஏ.எஸ். ஆக முடியாது. ஆரம்ப நாட்களிலிருந்து படித்து வந்தால்தான் சாத்தியமாகும். இதற்காக அனைத்து பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்.

இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதனால் நீட் தேர்வுக்கு தகுந்தாற்போல் நாம் படிக்க வேண்டும். அதற்கு நமது மனநிலையை தயார் செய்து கொள்ள வேண்டும். ரெயில்வே மற்றும் மத்திய அரசு பணிகளில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் உள்ளனர். அவர்களுக்கு கல்வி கற்பிப்பதில், அந்தந்த மாநிலங்கள் மாணவர்களை ஊக்குவித்து தயார்படுத்துகிறது.

ஆனால் தமிழகத்தில் மாணவர்களை ஊக்குவிக்க உந்து சக்திகள் இல்லை. நாம் என்ன மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்து கனவு காண வேண்டும். கனவு நிறைவேறாமல் போனாலும், கனவு காணுவதை விட்டுவிடக் கூடாது. கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும்.

நகர பகுதிகளில் உள்ள வயல்கள், வெட்ட வெளிகளை அழித்து விட்டு வீடுகளை கட்டியுள்ளனர். பிளாட் போடப்பட்டு வருகிறது. இதனால்தான் தற்போது வெப்பம் அதிகரித்து வருகிறது. வருங்காலத்தில் இன்னமும் வெப்பம் அதிகமாகும்.

இவ்வாறு அவர் கூறினார். #MeteorologistRamanan

Tags:    

Similar News