செய்திகள்
சிராக் பஸ்வான்

நிதிஷ்குமாரை பலவீனப்படுத்துவதில் வெற்றி பெற்று விட்டோம் - சிராக் பஸ்வான் சொல்கிறார்

Published On 2020-11-11 22:54 GMT   |   Update On 2020-11-11 22:54 GMT
பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் கட்சியை பலவீனப்படுத்த விரும்பினோம். அதில் வெற்றி பெற்று விட்டோம் என்று சிராக் பஸ்வான் கூறினார்.
பாட்னா:

பீகார் சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணியில் இடம் அளிக்கப்படாததால், சிராக் பஸ்வான் எம்.பி. தலைமையிலான லோக் ஜனசக்தி தனித்து போட்டியிட்டது.

அக்கட்சி ஒரு இடத்தில்தான் வெற்றி பெற்றது. முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் குறைவான இடங்களை பெற்றதற்கு லோக் ஜனசக்தியே காரணம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

இந்த நிலையில், லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு யாராவது ஒருவரை பாராட்ட வேண்டும் என்றால், அது பிரதமர் மோடிதான். அவரது தலைமை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். லோக் ஜனசக்தி ஆதரவுடன், பா.ஜனதா ஆட்சி அமைப்பதையே நாங்கள் எப்போதும் விரும்பினோம். இருப்பினும், மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம். எங்கள் நோக்கத்தை நாங்கள் மறைப்பதில்லை. நிதிஷ்குமார், முதல்-மந்திரியாக இருப்பது பீகாருக்கு நல்லதல்ல. எனவே, அவரது ஐக்கிய ஜனதாதளத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்று வேட்பாளர்களை நிறுத்தினோம். அதில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம்.

அதே சமயத்தில், பா.ஜனதா பலமடைய வேண்டும் என்று விரும்பினோம். அதுபோல், பா.ஜனதா பலம் பெற்றுள்ளது. வாக்குறுதி அளித்தபடி, நிதிஷ்குமாரை முதல்-மந்திரி ஆக்கினால், அந்த அரசுக்கு நாங்கள் ஆதரவுதர மாட்டோம். அதே சமயத்தில், கொள்கை வேறுபாடு இருப்பதால், எதிர்க்கட்சி கூட்டணியில் சேர மாட்டோம்.

மத்தியில், தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம். பீகார் தேர்தலில் பா.ஜனதாவை எதிர்த்து போட்டியிட்டாலும், மத்தியில் பா.ஜனதாவுடனான உறவு பாதிக்கப்படாது.

என் தந்தை ராம்விலாஸ் பஸ்வான் இறந்ததால், மத்திய மந்திரிசபையில் எங்கள் கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லை. மந்திரிசபையில் மீண்டும் இடம்பெறுவது பற்றி உரிய நேரத்தில் அறிவிப்போம்.

இவ்வாறு சிராக் பஸ்வான் கூறினார்.
Tags:    

Similar News