செய்திகள்
கோப்புப்படம்

ரேஷன் மண்எண்ணெய் கடத்திய 5 பேருக்கு ஓராண்டு ஜெயில் - விருதுநகர் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2021-02-24 18:11 GMT   |   Update On 2021-02-24 18:11 GMT
சிவகாசியில் ரேஷன் மண்எண்ணெய் கடத்திச்சென்ற 5 பேருக்கு ஒரு வருடம் ஜெயில் தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
விருதுநகர்:

மாவட்ட உணவுப்பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 31.8.2012 அன்று சிவகாசி தங்கையா நாடார் சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த வேனை சோதனையிட்டபோது அதில் 5,400 லிட்டர் ரேஷன் மண் எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வேனில் சிவகாசியை சேர்ந்த கணேசமூர்த்தி, சுனைச் செல்வம், மதுரையை சேர்ந்த ராமர், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த ஆறுமுகநயினார், ராஜபாளையத்தை சேர்ந்த மகாதேவராஜா ஆகிய 5 பேர் இருந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ரேஷன் கார்டு தாரர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் மண்எண்ணெய் வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காக வேனில் கடத்தி செல்வதாக ஒப்புக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களது ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் 5 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விருதுநகர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த முதல் மாஜிஸ்திரேட்டு மருதுபாண்டி குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் ஒரு வருட ஜெயில் தண்டனையும், தலா ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் இரண்டு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News