ஆன்மிகம்
குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில்

குணசீலத்தில் நாளை தொடங்குகிறது பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா

Published On 2020-09-18 07:22 GMT   |   Update On 2020-09-18 07:22 GMT
குணசீலத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. விழாவை பக்தர்கள் இணையதளத்தில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முசிறி தாலுகா குணசீலத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. கொரோனா வைரஸ் காரணமாக அரசு வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைப்படி கோவில் வளாகத்திற்குள்ளேயே மிகக்குறைந்த பணியாளர்களை கொண்டு விழா நடத்தப்பட உள்ளது.

இதில், உபயதாரர்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் பொது தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க அரசு வலியுறுத்தி உள்ளதால் குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட நபர்களுக்கு டோக்கன் அளித்து தரிசனத்திற்கு அனுமதி அளிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதன்படி, தினமும் மூலஸ்தான சேவை நேரம் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பிரம்மோற்சவ நாட்களில் நாளை மறுநாள் முதல் 29-ந்தேதி வரை காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் மற்றும் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும் மூலஸ்தான சேவைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை www.gunaseelamtemple.com என்ற கோவில் இணையதளம் மூலமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமாளின் அருளைப் பெறலாம் என்று இக்கோவிலின் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி அய்யங்கார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News