செய்திகள்
கருப்பையா

விருதுநகரில் இன்று கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற தொழிலாளி

Published On 2021-10-11 11:10 GMT   |   Update On 2021-10-11 11:10 GMT
தொழிலாளி மண்எண்ணை கேனுடன் வந்து விருதுநகர் கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 63), செங்கல் சூளை தொழிலாளி.

இவருக்கும், அவரது சகோதரர்களுக்கும் நடைபாதை பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதில் மற்றொரு கருப்பையாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.

இந்த நிலையில் நடைபாதையை எதிர்தரப்பினர் அடைத்து விட்டனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையம், துணை சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் போன்றவற்றில் தொழிலாளி கருப்பையா மனு கொடுத்துள்ளார்.

ஆனால் அவரது மனு குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு தொழிலாளி கருப்பையா வந்தார்.

கூட்டரங்கில் கலெக்டர் மேகநாதரெட்டி பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று கொண்டிருந்தார்.அவர் முன்பு வந்த கருப்பையா தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனை கவனித்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டு கருப்பையாவை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த தீப்பெட்டியை பறித்தனர். பின்னர் கருப்பையாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தொழிலாளி தீக்குளித்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மனு கொடுக்க வருபவர்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதையும் மீறி கருப்பையா மண்எண்ணை கேனுடன் வந்து விருதுநகர் கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News