செய்திகள்
பேரறிவாளன்

பேரறிவாளன் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

Published On 2019-10-17 08:06 GMT   |   Update On 2019-10-17 08:06 GMT
ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆண்டு மே 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேர் தூக்கு தண்டனை பெற்றனர். பின்னர் இவர்களது தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

ராஜீவ்காந்தியை கொலை செய்ய தனு மனித வெடி குண்டாக மாறினார். அவர் பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கி கொடுத்தது என்று குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், இந்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. இருந்தாலும் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.



இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தபோது ராஜீவ்காந்தி கொலை வழக்கில், வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பான சி.பி.ஐ., சிறப்புக்குழு தயாரித்த விசாரணை அறிக்கையை மனுதாரர் பேரறிவாளன் தரப்பிற்கு கொடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சி.பி.ஐ. பேரறிவாளன் மனுவுக்கு பதில் அளிக்கவும் உத்தரவிட்டது. கடந்த ஓரு ஆண்டாக இந்த வழக்கு விசாரணைக்கு வராமல், நிலுவையில் இருந்தது.

இந்த நிலையில், நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வில், பேரறிவாளன் தரப்பு வக்கீல் பிரபு இன்று காலையில் ஆஜராகி வாதாடுகையில், ‘பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு கடந்த ஓர் ஆண்டாக விசாரிக்கப்படாமல் உள்ளது. விசாரணை பட்டியலில் அந்த வழக்கு முதலில் இடம்பெறும். பின்னர், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடும்.

இவ்வாறு ஓர் ஆண்டாக விசாரிக்கப்படாமல், நிலுவையில் இருக்கும் பேரறிவாளன் வழக்கு வருகிற நவம்பர் 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு பதிவுத்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது.

எனவே அந்த வழக்கை பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது. திட்டமிட்டப்படி நவம்பர் 5-ந்தேதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்படாது எனவும், நவம்பர் 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தது.
Tags:    

Similar News