செய்திகள்
எம்எஸ் டோனி

சாம்கரண் முழுமையான கிரிக்கெட் வீரர்- டோனி புகழாரம்

Published On 2020-10-14 06:45 GMT   |   Update On 2020-10-14 06:45 GMT
சாம்கரண் தங்கள் அணியின் முழுமையான கிரிக்கெட் வீரர் என்று கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.
துபாய்:

ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்து சென்னை அணி 3-வது வெற்றியை பெற்றது.

துபாயில் நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது.

வாட்சன் 38 பந்தில் 42 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), அம்பதி ராயுடு 34 பந்தில் 41 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), சாம் கரண் 22 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ஐடேஜா 10 பந்தில் 25 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

சந்தீப் சர்மா, கலீல் அகமது, தமிழக வீரர் டி. நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்

பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வில்லியம்சன் அதிகபட்சமாக 39 பந்தில் 57 ரன் (7 பவுண்டரி) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். கரண் சர்மா, பிராவோ தலா 2 விக்கெட்டும், சாம் கரண், ஜடேஜா ‌ஷர்துல் தாகூர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் ஏற்கனவே ஐதராபாத்திடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது.

வெற்றி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது:-

நெருங்கி வந்து இந்த வெற்றியை பெற்றுள்ளது சிறப்பானது. பேட்ஸ்மேன்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். இந்த ஆடுகளத்தில் 168 ரன் இலக்கு போதுமானதா என்பது முதல் 6 ஓவரை பொறுத்துதான் இருக்கிறது. எங்களது வேகப்பந்து வீரர்கள் அபாரமாக பந்து வீசினார்கள்.

இதேபோல சுழற்பந்து வீரர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். எங்களுக்கு எதிராக ஐதராபாத் அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடமாட்டார்கள் என்றுதான் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீரரை பயன்படுத்தினோம்.

சாம்கரண் எங்கள் அணியின் முழுமையான கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார்.

இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி தொடர்ந்து நீடித்தால் மட்டுமே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை பெற முடியும்.

சி.எஸ்.கே. 9-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை வருகிற 17-ந் தேதி சார்ஜாவில் சந்திக்க உள்ளது. ஐதராபாத் அணி அடுத்த போட்டியில் கொல்கத்தாவை 18-ந் தேதி எதிர்கொள்கிறது.
Tags:    

Similar News