செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

பலியான போக்குவரத்து இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2021-11-23 10:10 GMT   |   Update On 2021-11-23 10:10 GMT
வாகனம் மோதி பலியான போக்குவரத்து இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த கனகராஜ், கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகில் உள்ள வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் கீழ் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த நேரத்தில், அவ்வழியே வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

படுகாயமடைந்த கனகராஜ் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

மோட்டார் வாகன ஆய்வாளரிடமிருந்து தப்பிப்பதற்காகத் தான், வாகனம் மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வேண்டுமென்றே மோதி நிற்காமல் சென்றுள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட வேண்டும். விசாரணையின் முடிவில் ஒருவேளை விபத்தாக இல்லாமல் இருந்தால், மோட்டார் வாகன ஆய்வாளரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒருவேளை விபத்தாக இருக்கும்பட்சத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வாகனத்தை மோதிவிட்டு, மனிதாபிமான அடிப்படையில் வண்டியை நிறுத்தாமல் சென்ற குற்றத்திற்காக அவர்மீது நடவடிக்கை எடுத்து, வாகன ஓட்டுநரின் உரிமத்தை ஆயுட்காலம் முழுவதும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.

காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொலையுண்ட காவல் சிறப்பு சார் ஆய்வாளர் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க உத்தரவிட்டுள்ள முதல்-அமைச்சர், பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கியிருப்பது பாரபட்சமாக இருக்கிறது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.

எனவே, முதல்-அமைச்சர் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணியாக விளங்கும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென்றும், காவல்துறை சிறப்பு சார் ஆய்வாளரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தக்க தண்டனைப் பெற்றுத் தர வேண்டும் என்றும், மோட்டார் வாகன ஆய்வாளர் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை தீர விசாரித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்மென்றும், மோட்டார் வாகன ஆய்வாளரும் பணியில் இக்கும்போது உயிரிழந்ததால், காவல் துறை சிறப்பு சார் ஆய்வாளரின் குடும்பத்திற்கு வழங்கியதைப்போல முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News