செய்திகள்
கோப்புப்படம்

கடந்த ஆண்டு ரெயில் மோதி 8,733 பேர் பலி - பெரும்பாலானோர் புலம் பெயர் தொழிலாளர்கள்

Published On 2021-06-02 22:53 GMT   |   Update On 2021-06-02 22:53 GMT
கடந்த ஆண்டு ரெயில் மோதி பலியானோர் எண்ணிக்கை, முந்தைய 4 ஆண்டுகளை விட குறைவுதான். இருப்பினும், கடந்த ஆண்டு ரெயில் போக்குவரத்து பெருமளவு குறைக்கப்பட்டதால், இந்த எண்ணிக்கை ஆச்சரியமாக உள்ளது.
புதுடெல்லி:

கடந்த ஆண்டு ரெயில் மோதியதில் 8 ஆயிரத்து 733 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் புலம் பெயர் தொழிலாளர்கள் ஆவர்.

மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் ரெயில்வே வாரியத்திடம் ஒரு கேள்வி விடுத்திருந்தார். கடந்த ஆண்டு ரெயில் மோதி இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்து அவர் கேட்டிருந்தார்.

அதற்கு ரெயில்வே வாரியம் பதில் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநில போலீசிடம் கிடைத்த தகவல்களின்படி, கடந்த ஆண்டு நாடு முழுவதும் ரெயில் மோதி 8 ஆயிரத்து 733 பேர் பலியாகி உள்ளனர். 805 பேர் காயமடைந்தனர்.

பலியானவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயா் தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் ஊரடங்கின்போது, ரெயில் தண்டவாளம் வழியாக சொந்த ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

சாலைவழி பயணத்தை விட ரெயில்பாதை பயணம் குறைவானது என்று கருதப்படுவதால் அவர்கள் அப்படி சென்றனர். தண்டவாளம் வழியாக சென்றால் போலீசிடம் இருந்து தப்பி விடலாம் என்று கருதினர். மேலும், வழிதவறி செல்ல வாய்ப்பில்லை என்றும், தண்டவாளத்தில் ரெயில்கள் வராது என்றும் அவர்கள் கருதினர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



கடந்த ஆண்டு ரெயில் மோதி பலியானோர் எண்ணிக்கை, முந்தைய 4 ஆண்டுகளை விட குறைவுதான். இருப்பினும், கடந்த ஆண்டு ரெயில் போக்குவரத்து பெருமளவு குறைக்கப்பட்டதால், இந்த எண்ணிக்கை ஆச்சரியமாக உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 25-ந் தேதி ஊரடங்கை தொடர்ந்து பயணிகள் ரெயில்கள் ஓடவில்லை. ஆனால், சரக்கு ரெயில்கள் தொடா்ந்து ஓடிக் கொண்டிருந்தன. கடந்த ஆண்டு மே மாதம் மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் ரெயில் தண்டவாளத்தில் ஓய்வெடுத்த 16 புலம்பெயர் தொழிலாளர்கள் சரக்கு ரெயில் மோதி பலியானது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News