செய்திகள்
அமித்ஷா

கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம்: அமித்ஷா 7-ந்தேதி மீண்டும் தமிழகம் வருகிறார்

Published On 2021-03-03 06:04 GMT   |   Update On 2021-03-03 06:04 GMT
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மீண்டும் வருகிற 7-ந்தேதி தமிழகம் வருகிறார். அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி வருகிறார்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தமிழகம் வந்து பிரசாரம் செய்தனர்.

அமித்ஷா கடந்த 28-ந்தேதி காரைக்கால், புதுவை, விழுப்புரத்தில் பிரசாரம் செய்தார். பின்னர் அன்று இரவு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா, தொகுதி பங்கீடு குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் அமித்ஷா மீண்டும் வருகிற 7-ந்தேதி தமிழகம் வருகிறார். அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி வருகிறார். அங்கு சுசீந்திரத்தில் தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடுதோறும் வழங்கும் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார்.

மேலும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 9-ந்தேதி வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். 10-ந்தேதி தஞ்சையில் ‘உங்கள் விருப்பம் எங்கள் அறிக்கை’ என்ற பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார்.

பா.ஜனதா தொண்டர்கள், மக்களிடம் சென்று தொகுதியில் நிலவும் பிரச்சனை, கோரிக்கை, விருப்பம், ஆலோசனை ஆகியவற்றை எழுதி வாங்குவார்கள். அதனை பெட்டியில் போட்டு எடுத்து செல்வார்கள்.

மக்கள் அளிக்கும் தகவல்களை தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக இடம்பெற செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Tags:    

Similar News