செய்திகள்
சமையல் பாத்திரத்தை படகாக பயன்படுத்தி மணமக்களை மண்டபத்துக்கு அழைத்து சென்ற காட்சி.

சமையல் பாத்திரத்தை படகாக பயன்படுத்தி மண்டபத்துக்கு சென்ற மணமக்கள்

Published On 2021-10-18 20:34 GMT   |   Update On 2021-10-18 20:34 GMT
மணமக்கள் கூறுகையில், ‘திருமணம் என்பது மங்களகரமான நிகழ்ச்சி. ஆனால் மழை-வெள்ளத்தை காரணம் காட்டி இதை தள்ளிவைக்க விரும்பவில்லை. எனவே குறித்த தேதியில் நடத்தி விட்டோம்’ என தெரிவித்தனர்.
ஆலப்புழா:

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த மழை வெள்ளத்தால் அதிகம் பாதித்த மாவட்டங்களில் ஆலப்புழாவும் ஒன்று.

இங்கு தாழ்வான பகுதிகளில் இருந்து இன்னும் வெள்ளம் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து முடங்கி இருக்கிறது. வாகன போக்குவரத்தும் சுமுக நிலையை எட்ட முடியாமல் உள்ளது.

இந்த நிலையில் ஆலப்புழாவை சேர்ந்த சுகாதார பணியாளர்களான ஆகாஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு நேற்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக தாளவாடியில் உள்ள ஒரு கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் நடந்து வந்தது.

ஆனால் சமீபத்தில் பெய்த பெருமழையால் மண்டபத்தை தண்ணீர் சூழ்ந்திருந்தது. அதைப்போல அங்கு செல்வதற்கான சாலைகளும் தண்ணீரில் மூழ்கியிருந்தன. இதனால் மண்டபத்தை எளிதில் அடைய முடியவில்லை.

இதனால் என்ன செய்வதென்று யோசித்த மணமக்களின் குடும்பத்தினர், சமையல் செய்ய பயன்படுத்தப்படும் பெரிய பாத்திரம் ஒன்றை படகாக பயன்படுத்த முடிவு செய்தனர்.

அதன்படி அலுமினிய பாத்திரம் ஒன்றை கொண்டுவந்து, அதில் மணமக்களை ஏற்றி மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்தது.

இது குறித்து மணமக்கள் கூறுகையில், ‘திருமணம் என்பது மங்களகரமான நிகழ்ச்சி. ஆனால் மழை-வெள்ளத்தை காரணம் காட்டி இதை தள்ளிவைக்க விரும்பவில்லை. எனவே குறித்த தேதியில் நடத்தி விட்டோம்’ என தெரிவித்தனர்.

Tags:    

Similar News