செய்திகள்
தோவாளை பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு குவித்து வைத்திருந்த பூக்களை படத்தில் காணலாம்.

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

Published On 2021-10-13 05:17 GMT   |   Update On 2021-10-13 05:17 GMT
ஆயுத பூஜையையொட்டி இன்று காலை பிச்சி, மல்லி, செவ்வந்தி, கேந்தி, வாடாமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் அதிகளவு விற்பனைக்கு வந்திருந்தது.
ஆரல்வாய்மொழி:

தோவாளை பூ மார்க்கெட்டிற்கு செண்பக ராமன்புதூர், தோவாளை, ஆரல்வாய்மொழி மற்றும் நெல்லை மாவட்டம் பழவூர், ஆவரைகுளம் பகுதிகளில் இருந்தும், பெங்களூரு, சேலம் பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பூக்கள் விலை சரிந்து காணப்பட்டது. ஆயுத பூஜையையொட்டி இன்று காலை பிச்சி, மல்லி, செவ்வந்தி, கேந்தி, வாடாமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் அதிகளவு விற்பனைக்கு வந்திருந்தது.

பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகளவு வந்திருந்தனர். விற்பனைக்கு வந்த பூக்களை போட்டிக் கொண்டு வாங்கினார்கள். இதனால் பூக்களின் விலை இன்று உயர்ந்து காணப்பட்டது. பிச்சி, மல்லிகைப்பூக்களின் விலை வழக்கத்தை விட இரு மடங்கு உயர்ந்திருந்தது.

சம்பங்கி பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டதால் விலை உயர்ந்தது. நேற்று கிலோ ரூ.250-க்கு விற்கப்பட்டது. இன்று ரூ.400 ஆக உயர்ந்திருந்தது. பிச்சிப்பூ கிலோ ரூ.700-க் கும், மல்லிகைப்பூ கிலோ ரூ.800-க்கும் விற்கப்பட்டது.

தாமரை பூவின் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு தாமரை பூ ரூ.15-க்கு விற்கப்பட்டது. மஞ்சள் கேந்தி கிலோ ரூ.100, வாடாமல்லி ரூ.200, மரிக்கொழுந்து ரூ.200-க்கு விற்பனை ஆனது. பூக்களை வாங்குவதற்கு வெளியூர் வியாபாரிகள் குறைவாக இருந்தாலும் உள்ளூர் வியாபாரிகள் அதிகளவு வந்திருந்தனர்.

இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், பூக்களை வாங்குவதற்கு இன்று அதிகளவு வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இனிவரும் நாட்களிலும் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றார்.
Tags:    

Similar News