செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குவியும் பொதுமக்கள் - தகுதியானவர்களுக்கு வழங்க வலியுறுத்தல்

Published On 2021-09-08 06:57 GMT   |   Update On 2021-09-08 06:57 GMT
திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும்15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை மனு அளிக்கின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பலர் அரசு வழங்கும் இலவச வீட்டுமனை அல்லது குடியிருப்பை பெற்றுக் கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.

இதற்காக தனிப்பட்ட முறையிலும், தொழிற்சங்க அமைப்புகள், அரசியல் கட்சிகள், உள்ளாட்சி அமைப்பு முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் தலைமையிலும் அவர்கள் ஏற்பாட்டின் படியும் மனுக்கள் தருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், ஆன்லைன் மூலம் மனு, ஜமாபந்தி, மனு நீதி நாள் முகாம்களில் மனுக்கள், முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளிப்போர் என மனுக்கள் குவிகிறது. திருப்பூர் மாவட்டத்தில்  ஆண்டுதோறும்15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை இதுபோல் மனு அளிக்கின்றனர். 

இருப்பினும் சராசரியாக ஆண்டுக்கு 2 ஆயிரம் பேர் என்ற அளவில் மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. மனுதாரர்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மனு தருவதும் வாடிக்கையாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தில் நிலுவையில் உள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் மனுக்களில் பல்லாயிரம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மனு அளித்துள்ளனர். 

பலர் பெயரளவில் மனு அளித்து விட்டு சொந்தமாக மனையிடம் வாங்கியும் விட்டனர். பலர் சொந்த ஊருக்கு  சென்றும் விட்டனர். எனவே தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News