உள்ளூர் செய்திகள்
பெரியகுளத்தில் ரசாயனம் தடவிய மீன்களை அதிகாரிகள் சோதனையிட்ட காட்சி.

பெரியகுளத்தில் ரசாயன மீன்கள் பறிமுதல்

Published On 2022-01-11 08:18 GMT   |   Update On 2022-01-11 08:18 GMT
பெரியகுளத்தில் ரசாயனம் தடவப்பட்ட 200 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் தினசரி 15க்கும்  மேற்பட்ட சிறு வியாபாரிகள் மீன் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு தேனி மாவட்ட மீன் வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜ் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் மீன்களின் தரம் குறித்து திடீர் சோதனை நடத்தினர்.

இதில் நகராட்சியில் உள்ள அனைத்து மீன் கடைகளிலும் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த மீன்களில் பார்மலின் என்னும் ரசாயன பொருள் கலந்திருப்பது தெரிய வந்தது. இந்த பொருள் கலக்கப்பட்டிருந்தால் மீன்கள் நீண்ட நாட்கள் அதே நிலையில் இருக்கும்.

ஆனால் இதனை வாங்கி சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நகராட்சி பகுதியில் அனைத்து கடைகளி லும் சோதனை மேற்கொண்டு 200 கிலோவுக்கும் மேற்பட்ட மீன்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து மீன் வியாபாரிகள் தெரிவிக்கையில், மதுரை  மீன் மார்க்கெட்டில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் இருந்து மீன்களை வாங்கி வருகிறோம். நாங்கள் மட்டுமின்றி திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்களும் மதுரையில் மொத்த வியாபாரிகளிடம் இருந்தே மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.

இதில் ரசாயனம் கலந்துள்ளதா? என்று எங்களுக்கு தெரியாது. எனவே மதுரையில் மொத்த மீன் விற்பனை நிலையத்தில் அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும். தற்போது விலை கொடுத்து வாங்கிய மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.
Tags:    

Similar News