செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் தேங்கியுள்ள சில்லரை நாணயங்களை மாணவர்களை கொண்டு எண்ண முடிவு

Published On 2019-08-27 05:23 GMT   |   Update On 2019-08-27 05:23 GMT
திருப்பதியில் தேங்கியுள்ள சில்லரை நாணயங்களை எண்ணும் பணியில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்த பரகாமணி சேவா குழு திட்ட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அதில் ரூபாய் நோட்டுகள் உடனுக்குடன் எண்ணப்படுகிறது. சில்லரை நாணயங்கள் மூட்டைகளில் கட்டி வாகனங்கள் மூலமாக திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

அங்கு சில்லரை நாணயங்களை எண்ணும் பணியில் தேவஸ்தானத்தில் வேலை பார்க்கும் 4-வது கிரேடு ஊழியர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுகின்றனர். அந்த ஊழியர்கள் அடிக்கடி விடுப்பில் சென்று விடுவதால், சில்லரை நாணயங்களை விரைவாக எண்ண முடியாமல் அதிகளவில் தேக்கம் அடைந்துள்ளது.

சமீபகாலமாக பரகாமணி சேவா குழுவில் சில்லரை நாணயங்களை எண்ணும் பணியில் அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தேவஸ்தான ஊழியர்கள், ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் எனத் தினமும் 200 பேர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அத்துடன் ஆந்திரா வங்கி சார்பாக சில்லரை நாணயங்களை எண்ணும் பணியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தினமும் 40ல் இருந்து 45 பேர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் தினமும் காலை முதல் மாலை வரை 2 ஷிப்டுகளாக சில்லரை நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் 2 ஆயிரம், 500, 200, 100 ரூபாய் நோட்டுகளை காலை 7 மணியில் இருந்து மதியம் 1 மணி வரையிலும், மதியம் 1 மணியில் இருந்து மாலை 6 மணி வரை 50, 20, 10 ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு நாணயங்கள், காசோலைகள் ஆகியவற்றை எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே சில்லரை நாணயங்களை விரைவாக எண்ணி முடிக்க, பள்ளி மாணவர்களை பரகாமணி சேவா குழுவில் சேர்த்துக்கொள்ளலாம் என திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் ஆலோசனை வழங்கி உள்ளார். அதன்படி தினமும் பள்ளி மாணவர்கள் 30 பேரை வரவழைத்து காணிக்கை சில்லரை நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபடுத்த பரகாமணி சேவா குழு திட்ட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

Tags:    

Similar News