ஆன்மிகம்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தை காணலாம்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

Published On 2020-12-21 01:43 GMT   |   Update On 2020-12-21 01:43 GMT
சபரிமலையில் முன்பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை :

ஐயப்பன் கோவில்களில் முதன்மையான கோவிலாக கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் விளங்குகிறது. இங்கு மண்டல பூஜையின் போதும், மகர ஜோதி தரிசனத்திற்கும் லட்சக்கணக் கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். சபரிமலை செல்பவர்கள் விரதமிருந்து மாலை அணிந்து இருமுடி கட்டி செல்வது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஒரு நாளைக்கு 2,000 பேரும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலா 3,000 பேரும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கேரள மாநில ஐகோர்ட்டு உத்தரவின்படி நேற்று முதல் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்காக, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் மட்டுமே அனு மதிக்கப்படுகிறார்கள். மேலும் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இந்த நிலையில் வட சபரிமலை என்று அழைக்கப்படும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் அதிகரித்துள்ளது. அதாவது சபரிமலைக்கு மாலை அணிந்து இருமுடி கட்டி செல்லும் பக்தர்கள் தற்போது அங்கு செல்வதற்கு கடுமையான கெடுபிடிகள் இருப்பதால் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர்.

காரணம், ஐயப்பன் கோவில்கள் ஆங்காங்கே இருந்தாலும், சபரி மலையில் உள்ளது போல் 18 படிகளுடன் அமைந்த கோவில்கள் ஒரு சில மட்டுமே. அதில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலும் ஒன்று. எனவே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களில் இருந்தும் அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு இருமுடி கட்டி வருகை தருகின்றனர். இருமுடி கட்டி வருபவர்கள் மட்டுமே இந்த 18 படிகளில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர்.

மற்றபடி மாலை அணியாதவர்கள், பெண்கள் அனைவரும் கோவில் பின்புறம் வழியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் இங்கே இருமுடி கட்டி வரும் பக்தர்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து நெய் அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்கின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் இது போன்ற வாய்ப்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மண்டல பூஜையை முன்னிட்டு வருகிற 26-ந் தேதி வரை மட்டும் ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நெய் அபிஷேகத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. ஜனவரி 14-ந் தேதி மாலை 6 மணிக்கு மகரஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருமுடி கட்டிக்கொண்டு கோவிலுக்கு வருவதாகவும் நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டது.
Tags:    

Similar News