ஆன்மிகம்
லலிதா திரிபுர சுந்தரி

ஸ்ரீபாலா ஒளஷத லலிதா திரிபுர சுந்தரி கோவில்

Published On 2020-12-26 04:21 GMT   |   Update On 2020-12-26 04:21 GMT
காஞ்சி மாவட்டம் திருப்போரூர் செம்பாக்கத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபாலா ஒளஷத லலிதா திரிபுர சுந்தரி கோவில். இந்த கோவிலின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருபோரூர் (OMR) - செங்கல்பட்டு சாலையில் உள்ளது வட திருவானைக்கா என அழைக்கப்படும் செம்பாக்கம். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மூலிகைகளால் உருவாக்கப்பட்ட தெய்வச்சிலைகள் வழிபாடு வழக்கத்தில் இருந்து வந்தது. தற்போது பல வருடங்களுக்குபிறகு காஞ்சி மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் செம்பாக்கத்தில் (ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் ஆலயம் அருகில்) ஸ்ரீ பீடம் ஸ்ரீ பாலா சமஸ்தான ஆலயத்தில் 9 அடி உயரத்தில் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த அம்பிகையை வணங்கினால் நோயற்ற வாழ்வு தருவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை

இந்த திருமேனி பல மூலிகைகள் மரப்பிசின், மரப்பட்டைகள் மற்றும் வேர்களிலிருந்து தயாரிக்கப்பட்ட கசாய கலவைக் கொண்டும் (இரசாயனப் பொருட்கள் ஏதும் இல்லாமல்) எண்ணற்ற பாணலிங்கங்கள், சாளகிராமங்கள், வலம்புரி சங்குகள் நவரத்தினங்கள் நமது உடம்பிலுள்ள நாடிநரம்புகளை குறிக்கும் விதமாக வெள்ளிக்கம்பிகள் முதலியன உச்சந்தலை முதல் பாதம் வரை பதிக்கப்பட்டும் வளர்பிறை காலங்களில் மருந்து சாற்றப்பட்டு பலஆயிரமாயிரம் முறை மூலமந்திர ஜபம் செய்து உருவேற்றி சுமார் ஏழரை ஆண்டுகள் உழைப்பில் லலிதாம்பிகை திருமேனி வடிவமைக்கப்பட்டுள்ளது. தாந்திரீக முறையில் இந்த அம்பிகை மந்திர, யந்திர, தந்திர, அஸ்திர, ஸஸ்த்திரம என்ற முறையில் அமையப்பெற்றவளாவாள்.

திதி நித்யா தேவதைகளை படிகளாக கொண்டு ஆலயத்தின் மேல்தள மாடியில் (கட்டுமலை கோவில்) கருவறையில் பிரதிஷ்டையாகியுள்ளது. நின்ற கோலத்தில் அங்குச, பாசம் இரண்டும் பிரயோகத்தில் இருக்க, கீழ்க்கையில் மலர் (புஷ்பபாணம்) மற்றும் கரும்பும் ஏந்தி அம்பிகை மகா சௌத்தரய ரூபத்துடன் அருள்பாலிக்கின்றாள்.

மூலிகை அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. மூலிகை மற்றும் அஷ்டகந்ததால் உருவாக்கபட்ட லேபனம் (தைலம்) குறிப்பிட்ட சில காலங்களில் பூசப்படும் என்றும் மாதம் ஒருமுறை மட்டும் பிரத்யேகமாக தறியில் நெய்யப்பட்ட 51 முழுபுடவை அணிவிக்கப்படும் என்று பீடத்தின் ஸ்தாபகர் தெரிவிக்கின்றார். தினசரி பாதபூஜை உண்டு.

தாய் மருந்து உண்பது போல கலிதோஷத்தை நீக்கி செளபாக்யம், ஆனந்தம், ஆரோக்யம் தந்திட நம் நலன் பொருட்டு மகாசக்தி சித்த மருத்துவச்சியாக அனுக்கிரகம் புரிகின்றாள். நோயற்ற வாழ்வு பெறுவதே இந்த அம்பிகையின் தரிசன பலனாகக் கூறப்படுகிறது. சிதம்பரத்தை நடராஜ சபை என்றும் ஸ்ரீ ரங்கத்தை அரங்கம் என்றும் அழைப்பதுபோல் இங்கு அம்பிகை கோயில் கொண்டிருக்கும் ஆலயம் ஸ்ரீசக்ரசபை என்று போற்றப்படுகிறது. ஏனென்றால் இங்கு அம்பிகை வாராகி, மாதங்கி பரிவாரங்களுடன் தர்பாரில் கோலோச்சி பரபாலனம் செய்வதாக ஐதீகம். ஹரி, ஹரன், அம்பிகையை வழிபட்ட பலனைத்தரும் மூம்மூர்த்தி சொரூபிணி.

ஒளஷத லலிதாவிற்கு நந்தவன புஷ்பங்கள் மட்டுமே சாற்றப்படுகிறது. பச்சை கற்பூர ஆரத்தி மட்டுமே. திதி நித்யா படிவழியே ஏறிச்சென்று அம்பிகையை தரிசித்துவிட்டு அதே படி வழியே இறங்காமல், எதிர்திசைபடி திதி நித்யா படிவழியே இறங்கவேண்டும். பெளர்ணமி திதியில் மட்டுமே சர்வ அலங்கார விசேஷ 27 வகை மகா தீபாராதனையை தரிசிக்க முடியும், மூலிகை பிரசாதம் வழங்கப்படும்

ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி

கீழ்த்தளத்தில் குரு மண்டல அசாத்ய ஸ்ரீசக்ர பிரதிஷ்டையுடன் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியை தரிசிக்கலாம். ஸ்ரீபாலா - அவள் நல்லவர்க்கு நடுவே விளையாடுவாள் வல்லவர்கெல்லாம் வல்லலளாய் ஆட்சி செய்வாள், அவளை விட அரியதான சூட்சமம் ஏது? என்கிறார் சித்தர் கருவூரார்.

சித்தமெல்லாம் சிவ மயமாய் திளைத்திருந்த ஆதி சக்தியின் அருளும் பூரணமாக தேவை என்பதை சித்தர்கள் உணர்ந்திருந்தனர். அத்தகையை ஆதிசக்தியின் அம்சம் தான் ஸ்ரீ பாலா தெய்வம் அவளையே போற்றி அகத்தியர், போகர், திருமூலர்,கெங்கனார், கரூரார் போன்ற சித்தர்கள் வணங்கி பூஜித்தனர். இந்த அம்சம் ஒரு சின்னஞ்சிறிய பெண்ணின் அம்சம் என்பது ஆச்சரியமான ஒன்று. நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று. தமிழில் வாலை வாலாம்பிகை என்றும் சித்தாந்தம் வணங்குகிறது.

சமஸ்கிருத்தில் பாலா என்றும் வேதாந்தம் இந்த குழந்தை தெய்வத்தை வணங்குகிறது. பல சித்தர்கள் பூஜித்த பாலா திரிபுரசுந்தரி குழந்தை வடிவமாக பட்டு பாவாடை சட்டையுடன் ரத்தினகரங்களுடன் நட்சத்திரங்களை பழிக்கும் முக்தியுடன் பக்தர்களை ‘வா’ என்று தாயுள்ளத்துடன் அழைத்து அருள்பாலிக்கிறார். பிரார்த்தனைகள் நிறைவேறியதும் அம்பாளுக்கும், மேலும் பள்ளியில் படிக்கும் 3 ஏழை குழந்தைகளுக்கும் பட்டுப் பாவாடை சட்டை மற்றும் அவரவர் வசதிற்கேற்ப கொலுசு கொடுத்தும் தங்களின் நேர்த்திகடன் நிறைவேற்றுக் கொள்கின்றனர். குழந்தைகளுக்கு பிரசாதமாக தேனைக் கொடுக்கின்றனர். இதனால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வருடம்தோறும் 4 நவராத்திரி விழாக்கள் நடைபெறும் ஆலயம்.

* ஆடி : மகா வாராகி ( ஆஷாட) நவராத்திரி உற்சவம் (ஆடி அமாவாசை திதி முதல் தசமி திதி) வரை
* புரட்டாசி : ஸ்ரீ சாரதா நவராத்திரி உற்சவம் (புரட்டாசி அமாவாசை திதி முதல் தசமி திதி வரை) விஜயதசமி அன்று காலை ஏககால இலட்சாரச்சனை
* தை : ஸ்ரீ இராஜ மாதங்கி நவராத்திரி உற்சவம் (தை அமாவாசை முதல் தசமி திதி வரை)
* பங்குனி : ஸ்ரீ லலிதா மஹா (வசந்த) நவராத்திரி மகோற்சவம்.

ஸ்ரீ வித்யா நவாரண மகாயாகம், திருக்கல்யாணம், ஸ்ரீ லலிதா பட்டாபிஷேகம், பண்டாசூரசம்ஹாரம், அற்புத திருமஞ்சனம், புஷ்பாஞ்சலி.

* மஹா சிவராத்திரி மகோற்சவம் ( Massi_4 Kala SiavaLinga Pooja)

பிரதி மாதம் பௌர்ணமியில், மாலை மகா அபிஷேக சர்வ அலங்காரம், பாலா உற்சவர் ஊஞ்சல் சேவை, நவஆவரண பூஜை, மூலிகை அம்பாளுக்கு 27 ஆர்த்தி திபாராதனை.

காலை 8 மணி முதல் 1 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 வரை.

அமைவிடம்:

திருப்போரூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் அமைந்துள்ளது செம்பாக்கம்.

ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி ஸ்ரீசக்ரராஜசபை - ஸ்ரீபீடம் ஸ்ரீபாலா சமஸ்தான ஆலயம்,
திருப்போரூர் (OMR)- செங்கல்பட்டு சாலை,
செம்பாக்கம், திருப்போரூர் தாலுகா
காஞ்சிபுரம் மாவட்டம்-603 108.
தொடர்புக்கு: 9789921151 , 9445359228. 
Tags:    

Similar News