செய்திகள்
மீன் வரத்து அதிகரிப்பு

தொண்டி கடல் பகுதியில் மீன் வரத்து அதிகம் - மீனவர்கள் மகிழ்ச்சி

Published On 2019-12-11 09:10 GMT   |   Update On 2019-12-11 09:10 GMT
தொண்டி கடல் பகுதியில் மீன்வரத்து அதிகமானதால் நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையினால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அதனால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. தற்போது வானிலை மாற்றத்தால் மீனவர்கள் தங்களது வழக்கமான பணிகளை தொடங்கினர்.

தொண்டி மற்றும் நம்பு தாளை பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று திரும்பியதில் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 6 நாட்டிக்கல் மைல் தொலைவு வரை சென்று மீன் பிடிக்கின்றனர். அவ்வாறு மீன் பிடித்து கரை திரும்பி, தொண்டி மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்த மீன்களில் ஊளி, ஊளா, ஊடகம், செந்நகரை, முறல், பாறை ஆகிய மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது.

ஏர்வாடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் இருந்தும் மீன்கள் தொண்டி மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது. ஏலம் எடுத்த பிறகு வியாபாரிகள் தேவகோட்டை, காரைக்குடி ஆகிய பகுதிகளுக்கு ஐஸ் நிரப்பிய பெட்டிகளிலில் அடைத்து விற்பனைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் இதற்கு நேர் மாறாக கடலில் சுமார் 6 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால் சென்று மறுநாளே கரை திரும்பும் தொண்டி அருகே உள்ள சிங்கார வேலர் லாஞ்சியடி, சோழியக்குடி ஆகிய பகுதிகளில் வசிக்கும் விசைப்படகு மீனவர்களுக்கு தொடர் மழை, புயல் காரணமாக மீன் துறை டோக்கன் வழங்கப்படாமல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

கடந்த சனி மற்றும் திங்கட்கிழமைகளில் டோக்கன் வழங்கப்பட்டு ஆழ்கடல் பகுதிக்குச் செல்லும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்று திரும்பியதில் எதிர்பார்த்த அளவு இறால், நண்டு, மீன் வரத்து இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். டீசல், ஆட்களின் சம்பளம் இவற்றிற்கு மட்டுமே மீன்கள் வரத்து வந்துள்ளது. லாபம் இல்லை என மீனவர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News