செய்திகள்
கோப்புப்படம்

விழுப்புரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது

Published On 2021-01-13 18:11 GMT   |   Update On 2021-01-13 18:11 GMT
விழுப்புரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 8¾ பவுன் நகைகளை மீட்டனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரத்தில் பூட்டியிருக்கும் வீடுகளின் கதவை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தன. இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபு, வளவனூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், ஏட்டு மணிமாறன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் புதுச்சேரி மாநிலம் கருவடிக்குப்பம் ரேடியோ ஸ்டேஷன் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அன்புராஜ் (வயது 49) என்பவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விழுப்புரம் நகரம், வளவனூர், திருவெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி, அரகண்டநல்லூர் ஆகிய போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடியிருப்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அன்புராஜை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 8¾ பவுன் நகைகளை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரமாகும்.
Tags:    

Similar News