ஆட்டோமொபைல்
எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி

மீண்டும் எம்ஜி ஹெக்டர் முன்பதிவை தொடங்கும் எம்ஜி மோட்டார்

Published On 2019-09-08 08:50 GMT   |   Update On 2019-09-08 09:10 GMT
எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 27ந் தேதி தனது முதல் மாடலாக ஹெக்டர் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்தியாவின் முதல் நேரடி இணைய வசதியை பெற்ற கார் என்ற பெருமையுடன்  யாரும் எதிர்பாராத விதமாக மிக சவாலான ஆரம்ப விலையிலும் களமிறக்கப்பட்டது.

இதனால், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியை இந்தியர்கள் வேகமாக முன்பதிவு செய்தனர். எதிர்பாராத அளவுக்கு முன்பதிவு குவிந்தது. கிட்டத்தட்ட 28,000 பேர் முன்பதிவு செய்த நிலையில், ஹெக்டர் எஸ்யூவிக்கான புக்கிங்கை திடீரென எம்ஜி மோட்டார் நிறுவனம் நிறுத்தியது.

மாதத்திற்கு 2,000 கார்கள் மட்டுமே என்ற உற்பத்தி இலக்குடன் வர்த்தகத்தை துவங்கியதால், வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக டெலிவிரி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுவே முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதற்கான முக்கிய காரணம்.

குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள ஆலையில் ஹெக்டர் எஸ்யூவியின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை எம்ஜி மோட்டார் நிறுவனம் இறங்கியுள்ளது. இரண்டாவது ஷிஃப்டிலும் கார் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், முன்பதிவை மீண்டும் துவங்குவதற்கான திட்டம் குறித்து எம்ஜி மோட்டார் அதிகாரி முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சாபா கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.




அதில்,"ஹெக்டர் டெலிவிரி குறித்த முறையான செயல்திட்டத்தை வகுக்கும் வரை புக்கிங்கை மீண்டும் திறக்கும் எண்ணம் இல்லை. முதலில் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவிரி கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

ஹெக்டர் உற்பத்தியை அதிகரிக்கும்போது மீண்டும் உற்பத்தியை துவங்குவதற்கான திட்டம் உள்ளது. எனது கூற்றுப்படி, அடுத்த மாதம் முன்பதிவு மீண்டும் துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது," என்று ராஜீவ் சாபா தெரிவித்துள்ளார்.

தற்போது 16,000 பேர் இதுபோன்ற காத்திருப்போர் பட்டியலில் பெயர் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு மிக நீண்ட காத்திருப்பு காலம் இருப்பதால், பலர் அண்மையில் வந்த கியா செல்டோஸ் காரின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர்.

இதனால், தகுதியுடைய வாடிக்கையாளர்களை இழக்க விரும்பாமல், காத்திருப்போர் பட்டியலில் பெயர் சேர்த்து வருகிறது எம்ஜி மோட்டார் நிறுவனம். எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியானது எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர், கவர்ச்சிகரமான அலாய் வீல்கள், பனோரமிக் சன்ரூஃப், 10.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டட பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது. இந்த சாதனம் நேரடி இணைய வசதியையும் அளிக்கிறது.

ரூ.12.18 லட்சம் என்ற சவாலான ஆரம்ப விலையில் மிகச் சிறப்பான இடவசதியுடன் வாடிக்கையாளர்களை வசீகரித்து வருகிறது. பாதுகாப்பு அம்சங்களிலும் இந்த கார் நிறைவை தருவதால், வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு புக்கிங் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News