செய்திகள்
ஜெகன் மோகன் ரெட்டி

மூன்று தலைநகரம் உருவாக்குவதற்கான சட்டத்தை ரத்து செய்தது ஆந்திர அரசு

Published On 2021-11-22 11:27 GMT   |   Update On 2021-11-22 11:27 GMT
மாநிலத்தின் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி தொடர்பான எங்கள் நோக்கம் திரித்து, தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளது என ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.
அமராவதி:

ஆந்திராவில் ஜெகன் மொகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்ததும், ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்க ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்தார். நிர்வாக பணிகளுக்காக விசாகப்பட்டினமும், சட்டப்பேரவைக்கு அமராவதியும், நீதித்துறைக்கு கர்னூலும் என 3 தலைநகர் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான சட்ட மசோதா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 

3 தலைநகர திட்டத்துக்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து தீவிர போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக அமராவதியில் தலைமைச் செயலகம் கட்ட நிலம் கொடுத்த விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். உயர் நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன.

இந்நிலையில், 3 தலைநகரை உருவாக்கும் சட்டத்தை ரத்து செய்ய ஜெகன் மோகன் ரெட்டி அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதுபற்றி சட்டசபையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது:-

ஆந்திராவில் தலைநகரை பரவலாக்கம் செய்வது மிகவும் அவசியம் என்று நாங்கள் நம்பினோம். எனினும் முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை அரசு திரும்ப பெறுகிறது. எந்த தவறும் இல்லாத புதிய மசோதாவை அறிமுகப்படுத்துவோம். 

மாநிலத்தின் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி தொடர்பான எங்கள் நோக்கம் திரித்து, தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சட்டரீதியாக தடைகளை உருவாக்கி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன

எங்கள் உண்மையான எண்ணம் மற்றும் அதிகாரப் பரவலாக்கத்தின் அவசியத்தை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விளக்கி, புதிய மசோதாவில் தேவையான மாற்றங்கள் சேர்க்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News