ஆன்மிகம்
தங்க அங்கி ஊர்வலம்

சபரிமலையில் 26-ந்தேதி மண்டல பூஜை: 22-ந்தேதி தங்க அங்கி ஊர்வலம்

Published On 2020-12-15 08:56 GMT   |   Update On 2020-12-15 08:56 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான தங்க அங்கி ஊர்வலம் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.
திருவனந்தபுரம் :

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. இதற்காக கடந்த மாதம் 15-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக் கப்பட்டு வருகின்றனர்.

மண்டல பூஜை தினத்தில் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். 453 பவுன் எடை கொண்ட அந்த தங்க அங்கி பத்தனம் திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்கு மட்டும் அந்த நகைகள் அங்கிருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்துவரப்படும்.

இந்த ஆண்டுக்கான தங்க அங்கி ஊர்வலம் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம், மாலையில் ஓமல்லூர் ரத்தகண்ட சுவாமி கோவிலை வந்தடைகிறது. பின்பு அங்கு தங்கிவிட்டு மறுநாள் (23-ந்தேதி) காலை 8 மணிக்கு புறப்படுகிறது.

அன்றைய தினம் மாலை கோனி முழிங்கமங்கலம் கோவிலுக்கு சென்றடையும் தங்க அங்கி ஊர்வலம், 24-ந்தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு, மாலையில் ராணி பெருநாடு தர்ம சாஸ்தா கோவிலுக்கு சென்றடையும். 25-ந்தேதி காலை அங்கிருந்து புறப்படும் ஊர்வலம் பம்பா கணபதி கோவிலை வந்தடையும்.

அங்கு பக்தர்கள் தரிசனத்திற்காக தங்க அங்கி வைக்கப்படும். பின்னர் பிற்பகல் 3 மணிக்கு அங்கிருந்து சன்னி தானத்திற்கு புறப்படும். மாலை 5 மணிக்கு சரங்குத் திக்கு வந்தடையும் தங்க அங்கிக்கு மேள தாளங்கள் முழங்க வரவேற்பு கொடுக்கப்படும். பின்னர் சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

கொரோனா பிரச்சினையால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை வரும் பக்தர்களுக்கு மட்டுமின்றி அங்கு பணிபுரியும் ஊழியர்கள், போலீசார், தேவஸ்தான ஊழியர்களுக்கும் 14 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

இதில் இதுவரை 220-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப் படுத்த சபரிமலையில் கட்டுப்பாடுகளும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News