செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. தலைவர்கள் இன்று மாலை ஆலோசனை- பொதுக்குழு கூடும் தேதி முடிவு செய்யப்படுகிறது

Published On 2020-12-14 05:07 GMT   |   Update On 2020-12-14 06:34 GMT
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் இன்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை:

தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இன்னும் 4 மாதங்களே உள்ளதால் எல்லா கட்சிகளும் தயாராகி வருகின்றன.

தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவை அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. அதோடு பிரசாரத்தையும் தொடங்கி விட்டது.

இந்தநிலையில் அ.தி.மு.க.வும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 20-ந் தேதி அ.தி.மு.க. தலைவர்கள் முதல் கட்ட ஆலோசனை நடத்தினார்கள். அப்போது பூத் கமிட்டி அமைப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக சட்டசபை தேர்தலில் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும். எனவே பெண்களுக்கான வாக்குச்சாவடிகளில் மேலும் முகவர்களை நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதோடு பூத் கமிட்டிகளில் அ.தி.மு.க. பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் அ.தி.மு.க. தலைவர்கள் சென்னையில் இன்று மாலை 4.30 மணிக்கு மீண்டும் சந்தித்து சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.

கூட்டத்தில் அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட பணிகள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

அ.தி.மு.க. மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டச்செயலாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்தலுக்காக எத்தகைய பணிகளை செய்து முடித்துள்ளனர் என்று இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொருவரும் செய்த பணிகள் தொடர்பான ஆவணங்களுடன் கூட்டத்துக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக பூத் கமிட்டிகளில் கவனம் செலுத்தப்பட வேண்டியது பற்றி இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் பூத்துகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் சுமார் 75 பேரை பணிகளில் ஈடுபடுத்த அ.தி.மு.க. தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர். மண்டல பொறுப்பாளர்கள் தேர்தல் நடவடிக்கைக்காக எந்தெந்த மாவட்டங்களில் எத்தகைய பணிகளை நிறைவு செய்துள்ளனர் என்றும் ஆய்வு செய்யப் படுகிறது.

அடுத்து அ.தி.மு.க.வின் தேர்தல் பிரசாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. தேர்தல் பிரசாரத்தில் முன்நிறுத்தப்பட வேண்டிய அம்சங்கள் பற்றி அ.தி.மு.க. தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

இதுதவிர தொகுதி பங்கீடு, கூட்டணி போன்றவை பற்றியும் பேசப்படலாம் என்று தெரிகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் பிரதானமாக உள்ளன. இதில் பா.ஜனதா மட்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளது.

தே.மு.தி.க., பா.ம.க. நிலை என்ன என்பது பற்றியும் அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்து கொடுக்கலாம் என்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழுவை விரைவில் கூட்டவும் ஏற்பாடு நடந்து வருகிறது. வழக்கமாக டிசம்பர் மாதம் கடைசியில் அ.தி.மு.க. பொதுக்குழு கூடுவதுண்டு. அந்த வகையில் இந்த மாத இறுதியில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூடுகிறது.

இதற்கான தேதி இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. தொண்டர்களை உற்சாகப் படுத்தும் வகையில் முடிவுகள் எடுக்க மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே இன்றைய கூட்டத்துக்கு பிறகு அ.தி.மு.க. தரப்பில் அதிரடி நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News