செய்திகள்
திகார் ஜெயில்

டெல்லி மாணவி கற்பழித்து கொலை - குற்றவாளிகளை தூக்கில் போட திகார் ஜெயிலில் ஊழியர் இல்லை

Published On 2019-12-03 07:59 GMT   |   Update On 2019-12-03 09:45 GMT
டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தூக்கில் போட திகார் சிறையில் ஊழியர் இல்லாததால் சிறை நிர்வாகத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
புதுடெல்லி:

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ஒருவரை 6 வாலிபர்கள் கற்பழித்து கொலை செய்த சம்பவம் நாட்டை உலுக்கியது.

இந்த வழக்கில் கைதான 6 பேரில் ஒருவர் சிறார் என்பதால் தண்டனையில் இருந்து தப்பினார். ராம்சிங் என்பவர் டெல்லி திகார் ஜெயிலுக்குள் அடித்து கொல்லப்பட்டார்.

பவன் குப்தா, முகேஷ்சிங், வினய் சர்மா, அக்‌ஷய் தாகூர் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு அந்த தீர்ப்பை உறுதி செய்தது.

இதையடுத்து அவர்களை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் திகார் ஜெயிலில் நடந்த நிலையில் 4 பேரும் தண்டனையை குறைக்க வேண்டும் என கருணை மனு தாக்கல் செய்தனர். ஆனால் டெல்லி கவர்னர் அந்த மனுக்களை தள்ளுபடி செய்தார்.

மேலும், கோர்ட்டு உத்தரவுப்படி 4 பேரையும் தூக்கில் போடவும் பரிந்துரைத்தார். இதையடுத்து 4 பேரின் கருணை மனு மத்திய உள்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விரைவில் இந்த மனுக்கள் மீதான ஆய்வு முடிந்து, கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என கூறப்படுகிறது.

குற்றவாளிகள் எந்த நேரத்திலும் தூக்கில் போடப்படலாம் என்ற நிலையில், திகார் சிறையில் குற்றவாளிகளை தூக்கில் போட ஊழியர் இல்லாததால் சிறை நிர்வாகத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

கடைசியாக பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் பயங்கரவாதி அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை திகார் ஜெயிலில் நிறை வேற்றப்பட்டிருந்தது. இச்சிறையில் குற்றவாளிகளை தூக்கில் போடுவதற்கு என்று நிரந்தர ஊழியர் கிடையாது.

எனவே தற்போது ஒப்பந்த அடிப்படையில் ஊழியருக்கு வாடகை பேசி, குற்றவாளிகளை தூக்கில் போடும் பணிக்காக நியமிக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News