செய்திகள்
வடகிழக்குப்பருவமழை முன்னேற்பாடு குறித்து நடந்த கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசியபோது எடுத்தபடம்.

3 மாதங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் இருப்பு வைப்பு- உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்

Published On 2020-11-24 14:27 GMT   |   Update On 2020-11-24 14:27 GMT
பருவமழை முன்னெச்சரிக்கையாக ரேஷன் கடைகளில் 3 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருவாரூர்:

வடகிழக்குப்பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சாந்தா முன்னிலை வகித்தார். நாகை செல்வராசு எம்.பி., கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும்பட்சத்தில் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல், மழை கண்காணிப்பு பணிக்காக 10 மண்டல கண்காணிப்பு அலுவலர்கள், துணை கலெக்டர்கள், 10 வெள்ள தடுப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ள நிவாரண பணிகளை செயல்படுத்த 29 குழுக்களும், 20 மருத்துவ குழுக்கள், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 10 கண்காணிப்பு குழுக்கள், 52 கால்நடை மருத்துவ குழுக்கள், 5 உணவு பாதுகாப்பு குழுக்கள், 11 தகவல் அளிக்கும் குழுக்கள் உள்பட மொத்தம் 689 அலுவலர்கள் அடங்கிய 151 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

வெள்ள பாதிப்புகளை தடுக்க 26 ஆயிரத்து 495 மணல் மூட்டைகள், 98 ஆயிரம் காலி சாக்குகள், 672.38 டன் மணல், 3 ஆயிரத்து 428 சவுக்கு மரங்கள் தயார் நிலையில் உள்ளது. மின்சாரத்துறை மூலம் 12 துணை மின் நிலையங்களில் 5 ஆயிரம் மின்கம்பங்களும், 70 கி.மீ. மின்கம்பிகளும், 30 டிரான்ஸ்பார்மர்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. 277 மரம் அறுக்கும் எந்திரங்கள், 103 பொக்லின் எந்திரங்கள், 111 டிராக்டர்கள், 74 டீசல் பம்பு செட்டுகள் கையிருப்பில் உள்ளன. மாவட்டத்தில் 212 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, 249 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள 150 ரேஷன் கடைகளில் 3 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அவசர உதவிக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் உள்ள 04366-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். திருவாரூர் மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்வதற்கு அனைத்து துறைகளும் தயாராக உள்ளன.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Tags:    

Similar News