லைஃப்ஸ்டைல்
மாம்பழம்

மாம்பழத்தை எப்படியெல்லாம் சாப்பிடலாம்..?

Published On 2021-05-30 01:54 GMT   |   Update On 2021-05-30 01:54 GMT
‘பழங்களின் அரசன்’ என்ற சிறப்பு மாங்கனிக்கு உண்டு. முக்கனிகளில் முதன்மை இடம் மாங்கனிக்குத்தான். சுவை மற்றும் சத்துக்களிலும் ‘மா’வுக்கு முன்னணி இடம் உண்டு. அதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்.
மாம்பழத்தின் தாயகம் இந்தியாதான். இமயமலை அடிவாரப் பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியது. ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை மட்டும் கிடைக்கும் பழ வகையைச் சேர்ந்தது மா. வட்டம் மற்றும் நீள்வட்ட வடிவங்களில் பல்வேறு அளவுகளில் மாங்கனி விளைகிறது. மஞ்சள், இளஞ்சிவப்பு-மஞ்சள், இளஞ்சிவப்பு-பச்சை நிறங்களில் கனிகள் விளையும்.

‘வைட்டமின் ஏ’ மாங்கனியில் அதிக அளவில் உள்ளது. இது கண்பார்வைக்கு உகந்த வைட்டமினாகும்.

புதிதாக பறித்த மாங்கனியில் பொட்டாசியம் மிகுதியாக இருக்கும். மேலும் ‘வைட்டமின் பி-6’, ‘வைட்டமின் சி’, ‘வைட்டமின் ஈ’ நிறைய அளவில் உள்ளது. வைட்டமின் சி, உடலை நோய்த் தொற்றுக்கு எதிராக காக்கும்.

‘வைட்டமின் பி-6’, மூளைக்கு அவசியமான அமினோ அமிலம் சுரக்க துணைபுரியும். தாமிர தாது நிறைய உள்ளது. இது பல்வேறு நொதிகள் செயல்பட துணைக்காரணியாக விளங்கும். ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியிலும் இது பங்கு வகிக்கிறது. உடனடியாக ஜீரணம் ஆகும் நார்ச்சத்து நிறைய உள்ளது. மற்றும் பல புளோவனாய்டுகளும், தாது உப்புக்களும் குறைந்த அளவில் உள்ளன.

எப்படியெல்லாம் சாப்பிடலாம்..?

மாங்கனியை கழுவிவிட்டு அப்படியே கடித்து சாப்பிடலாம். மாங்கனித் துண்டுகள் பழச் சாலட்டுகளில் முக்கிய இடம் பிடிக்கிறது. பனிகட்டிகளுடன் சேர்க்கப்பட்ட மாங்கனிச் சாறு உலகம் முழுவதும் பிரபலமான சாறு வகை பானமாகும். மாங்கனிச் சாற்றை பாலுடன் சேர்த்து ‘மாங்கோ மில்க் ஷேக்’ ஆக சுவைக்கப்படுகிறது. ஜாம், பனிக்கூழ் மற்றும் உணவு உற்பத்தி துறையில் மாம்பழம் பயன்படுத்தப்படுகிறது. ஆசிய நாடுகளில் மாங்காய் ஊறுகாய், சட்னி பிரபலமாகும். பழுக்காத மாங்காய், குழம்புகளிலும் சேர்க்கப்படுகிறது.
Tags:    

Similar News