செய்திகள்
கொரோனா வைரஸ்

வீட்டில் தனிமைப்படுத்தியவர்கள் இருந்தால் கழிவறைகள் வழியாகவும் கொரோனா பரவ வாய்ப்பு

Published On 2021-05-11 06:43 GMT   |   Update On 2021-05-11 06:43 GMT
வீடுகளில் இருக்கும் கழிவறைகள் மூலமும் மற்ற வீடுகளுக்கு பரவ வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளார்கள்.

சென்னை:

கொரோனா வைரஸ் எப்படியெல்லாம் பரவுகிறது என்பது பற்றி அவ்வப்போது வெளிவரும் தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி அளிக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும் ஒரு ஸ்பிரே பாட்டில் மூலம் ஸ்பிரே செய்தால் சில அடி தூரம் நீர் திவலைகள் சென்று கீழே விழும். அதே போல்தான் கொரோனா பாதித்தவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவுகிறது. இதை தடுப்பதற்கு முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்தல் அவசியம் என்றார்கள்.

இப்போது வீடுகளில் இருக்கும் கழிவறைகள் மூலமும் மற்ற வீடுகளுக்கு பரவ வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மூலம் கண்டு பிடித்துள்ளார்கள்.

சீனாவின் வூகான் நகரில் தான் முதல் முதலில் கொரோனா பரவியது அனை வரும் அறிந்ததே. அந்த நகருக்கு சென்றதால் கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவர் அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் 15-வது மாடியில் இருக்கும் தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேறு யாருக்கும் தொற்று இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

அப்படியிருந்தும் 25 மற்றும் 27-வது மாடியில் குடியிருந்த 4 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இது நிபுணர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

எப்படி பரவியது என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுதான் கழிவறை வழியாக பரவியது தெரியவந்தது. பொதுவாக அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவறை குழாய்கள் ஒன்றுக் கொன்று இனைப்பு இருக்கும். தரைதளத்தில் அனைத்து வீட்டு குழாய்களும் ஒரே குழாயில் இணைக்கப்பட்டுதான் வெளியேற்றப்படும்.

எனவே 15-வது மாடியில் கழிவறைக்குள் ஒரு வாயுவை செலுத்தி 25-வது மாடிக்கு செல்கிறதா என்று பரிசோதித்த போது அங்கும் சென்றதை பார்த்தனர். அதன்படி கொரோனா வைரசும் சென்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இதே போல் சார்ஸ் வைரஸ் பரவிய போது ஆங்காங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 342 பேருக்கு பரவியது. 42 பேர் இறந்தார்கள். அதுவும் கழிவறை குழாய் வழியே பரவியது உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவிலும் கொரோனா அதிகமாக பரவி வரும் நிலையில் லேசாக தொற்று ஏற்பட்டுள்ள பலர் வீடுகளில்தான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். அதிலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தனிமைப்படுத்தி கொண்டிருப்பவர்களால் மற்றவர்களுக்கு ‘ரிஸ்க்’ அதிகம்.

எனவே வீடுகளில் கழிவறையை அடிக்கடி கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும். பயன்படுத்தியதும் கழிவறைக்குள் கிருமி நாசினியை ஊற்றுவதோடு மூடிய பிறகுதான் ‘பிரஸ்’ பண்ண வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News