செய்திகள்
விராட் கோலி - ஹர்த்திக் பாண்ட்யா

பாகிஸ்தானுடன் இன்று மோதல்: ஹர்த்திக் பாண்ட்யா குறித்து விராட் கோலி கருத்து

Published On 2021-10-24 04:53 GMT   |   Update On 2021-10-24 04:53 GMT
உலக கோப்பைகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் மோசமான ஆட்டங்கள் குறித்து நாங்கள் தற்போது கவலைப்படவில்லை என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.
துபாய்:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

இதன் ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

நேற்று நடந்த ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவையும், இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் வெஸ்ட இண்டீசையும் (குரூப்-1) வீழ்த்தியது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி குரூப்-2 பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. இந்த போட்டி துபாயில் இந்திய நேரடிப்படி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-

பாகிஸ்தான் மிகவும் வலுவான அணி. நீண்ட நாட்களாக அவர்கள் திறமையாக விளையாடுகிறார்கள். அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும். ஆட்டத்தின் போக்கை எப்போது வேண்டுமானாலும் மாற்றக்கூடிய வீரர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர்.

அனைத்து விதமான சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு இந்திய வீரர்கள் தேர்வு இருக்கும் ஐ.பி.எல்.லில் விளையாடியதால் எங்கள் வீரர்கள் உலக கோப்பைக்கு தயாராக உள்ளனர்.

ஹர்த்திக் பாண்ட்யா 6-வது வரிசையில் களம் இறக்கப்படலாம். அவர் அணிக்கு மதிப்புமிக்கவர் ஆவார். அவர் ஒரு ஓவர், 2 ஓவர்கள் வீசும் அளவுக்கு சில திட்டங்களை வகுத்துள்ளோம்.

ஹர்த்திக் பாண்யாவிடம் உள்ள திறமையை ஒரே இரவில் கொண்டுவர முடியாது. அவர் ஒரு பேட்ஸ்மேனாக அணியில் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.அவர் சிறப்பாக விளையாடும்போது எதிரணியை தினறடித்து விடுவார். அவரது இடம் குறித்து எந்த பேச்சும் கிடையாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் அவர் அற்புதமாக விளையாடி இருந்தார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறியதாவது:-

உலக கோப்பைகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் மோசமான ஆட்டங்கள் குறித்து நாங்கள் தற்போது கவலைப்படவில்லை. எங்கள் பலம், திறமை குறித்து சிந்தித்து வருகிறோம்.

சிறப்பாக ஆடி நல்ல முடிவுகளை பெற முயல்வோம். சர்பிராஸ் அகமதை விட சோயிப்மலிக் சுழற்பந்து வீச்சை சமாளித்து ஆடுவார். இதனால் அவரை அணியில் சேர்த்தோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News