செய்திகள்
கோப்புபடம்

பழுதடைந்த கட்டிடத்தால் பள்ளி வகுப்பறையில் நடைபெறும் சத்துணவு பணிகள்

Published On 2021-10-03 08:10 GMT   |   Update On 2021-10-03 08:10 GMT
தற்போது நவம்பர் 1-ந்தேதி முதல் பள்ளிகள் முழுமையாக செயல்படலாம் என அரசு அறிவித்துள்ளது.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கரடிவாவியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். தற்போது வரும் கல்வியாண்டிற்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாகவே இந்த பள்ளியில் சத்துணவு கூடத்திற்கு சொந்த கட்டிடம் இல்லை. இதையறிந்த ஒருவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் சொந்த செலவில் சத்துணவு கூடம் அமைத்து கொடுத்தார். தற்போது அந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து இடிந்த நிலையில் உள்ளது. இதனால் சத்துணவு பணிகள் பள்ளி வகுப்பறையில் நடைபெற்று வந்தது.

தற்போது நவம்பர் 1-ந்தேதி முதல் பள்ளிகள் முழுமையாக செயல்படலாம் என அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே இடப்பற்றாக்குறையில் தவிக்கும் இந்த பள்ளியில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிகரித்துள்ளதால் வகுப்பறைகள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகம் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தும் யாரும் அக்கறை காட்டவில்லை. திருப்பூர் மாவட்டத்திலேயே சிறந்த பள்ளி என 2018-19ம் கல்வி ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றது இப்பள்ளி. எனவே உடனடியாக சத்துணவு கூடத்திற்கு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News