செய்திகள்
பெட்ரோல் பங்க்

அரசு கூட்டுறவு நிறுவன பெட்ரோல் பங்க்கில் தாசில்தார் ஜீப்புக்கு டீசல் வழங்க மறுப்பு

Published On 2020-09-22 14:00 GMT   |   Update On 2020-09-22 14:00 GMT
அரசு கூட்டுறவு நிறுவன பெட்ரோல் பங்க்கில் தாசில்தார் ஜீப்புக்கு டீசல் வழங்க மறுப்பதால் அவர்கள் ஜீப்பை பயன்படுத்தாமல் தங்களது சொந்த இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவையில் அரசு கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபி சார்பில் பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகிறது.

இந்த பெட்ரோல் பங்குகள் மூலம் அரசு துறை வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பப்படும். இதற்கான தொகையை அமுதசுரபிக்கு அரசு செலுத்தி விடும்.

ஆனால், கடந்த சில மாதங்களாக இந்த தொகை அமுதசுரபிக்கு செலுத்தப்படவில்லை.

கூடுதல் தொகையை பாக்கி வைத்திருந்ததால் சமீப காலமாக அரசு வாகனங்களுக்கு பெட்ரோல்- டீசல் நிரப்ப அமுதசுரபி பெட்ரோல் பங்க் நிறுவனம் நிறுத்தி விட்டது. இதனால் பெரும்பாலான அரசு அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனத்தை பயன் படுத்தவில்லை.

அதுபோல் புதுவை வருவாய்துறையை சேர்ந்த தாசில்தார்களுக்கும் அரசு சார்பில் ஜீப்புகள் வழங்கப்பட்டு இருந்தன. ஆனால், டீசல் வழங்க மறுப்பதால் அவர்கள் அந்த வாகனத்தை பயன்படுத்தாமல் தங்களது சொந்த இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது கொரோனா பணிகளை மேற்கொண்டு வரும் தாசில்தார்கள் சம்பவ இடங்களுக்கு இரு சக்கர வாகனங்களிலேயே செல்கின்றனர்.

இதனால் குறிப்பிட்ட நேரத்தில் சென்று அவர்களால் பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை என தாசில்தார்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News