செய்திகள்
தாராபுரம் உழவர்சந்தை

தாராபுரம் உழவர்சந்தை பஸ் நிலையத்திற்கு திடீர் மாற்றம்

Published On 2021-06-18 07:09 GMT   |   Update On 2021-06-18 07:09 GMT
பொதுமக்கள் வரிசையாக நின்று காய்கறி வாங்கும் வகையில் சமூக இடைவெளி விட்டு வட்டங்கள் வரையப்பட்டது.
தாராபுரம்:

தாராபுரம் உழவர் சந்தை மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் ஆகியவை தாராபுரம் பழைய பஸ் நிலையத்தில் வழக்கம் போல செயல்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று  பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டது.

அப்போது தாராபுரம் பழைய பஸ் நிலையத்தில் வழக்கம் போல செயல்பட்டு வந்த உழவர்சந்தை அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. கடைகள் அருகருகே இருந்ததால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வியாபாரிகள் அனைவருக்கும் அங்கு கடை அமைக்க போதுமான இடமும் இல்லை என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நகராட்சி பள்ளி வளாகத்திற்கு வந்து காய்கறி கடைகளை பார்வையிட்ட தாராபுரம் சப்&-கலெக்டர் பவன்குமார் உழவர் சந்தையை தாராபுரம் பஸ்நிலையத்திற்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டார். அதைத்தொடந்து தாராபுரம் பஸ்நிலையத்தில் உள்ள பஸ்நிறுத்தும் இடங்களில் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் பொதுமக்கள் வரிசையாக நின்று காய்கறி வாங்கும் வகையில் சமூக இடைவெளி விட்டு வட்டங்கள் வரையப்பட்டது. பஸ்நிலையத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை உழவர்சந்தை செயல்படும்  என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News