செய்திகள்
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகள், அவருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி

‘போலீசார் பொதுமக்களின் நண்பர்களாக மாறவேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுரை

Published On 2019-10-10 00:46 GMT   |   Update On 2019-10-10 00:46 GMT
போலீசார் பொதுமக்களின் நண்பர்களாக மாறவேண்டும் என்று பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
புதுடெல்லி:

2018-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்து பயிற்சி பெற்று வரும் 126 இளம் அதிகாரிகள் பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று சந்தித்தனர். அவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அவர்களுடன் உரையாடும்போது அவர் கூறியதாவது:-

உங்களை நீங்கள் நம்ப வேண்டும். அலுவலக பயிற்சியுடன், தன்னம்பிக்கையுடன் கூடிய உள்ளார்ந்த ஆற்றலும்தான் தினந்தோறும் நீங்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள ஆற்றலை தரும். குற்றங்களை தடுப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதிலும், நவீன போலீஸ் துறையை உருவாக்குவதில் தொழில்நுட்பங்களை முன்னிலைப்படுத்துவதிலும் போலீசார் முக்கிய பங்காற்ற வேண்டும்.

போலீசார் தங்கள் தினசரி பணியில் சேவை மற்றும் அர்ப்பணிப்பை மனதிற்கொண்டு செயலாற்ற வேண்டும். குறிப்பாக சாதாரண குடிமக்களுடன் தங்களுக்கு உள்ள தொடர்பின் முக்கியத்துவத்தை போலீசார் உணர வேண்டும்.

போலீஸ் துறை பற்றிய பொதுமக்களின் கண்ணோட்டத்தை ஒவ்வொரு அதிகாரியும் உணர்ந்து கொள்வதுடன், தங்களை பொதுமக்கள் எளிதில் அணுகும் நிலையையும் ஏற்படுத்த வேண்டும். அத்துடன் போலீசார் பொதுமக்களின் நண்பர்களாக மாறவேண்டும்.

சிறப்புமிக்க தேசத்தை உருவாக்கும் வகையில் அயராது உழைத்து வரும் இளம் அதிகாரிகளாகிய உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். 2018-ம் ஆண்டு பிரிவில் ஏராளமான பெண்கள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இது போலீஸ் துறை மற்றும் நாட்டின் கட்டுமானத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்த சந்திப்பின்போது, நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களை மேம்படுத்தும் பணியில் போலீசாரின் பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News