செய்திகள்
கப்பல் (கோப்பு படம்)

கப்பலில் இருந்து வெளியேறக்கூட அனுமதியில்லை... சைப்ரஸ் நாட்டில் சிக்கித் தவிக்கும் 10 இந்திய மாலுமிகள்

Published On 2021-09-05 14:18 GMT   |   Update On 2021-09-05 14:18 GMT
கப்பலில் சிக்கி உள்ள மாலுமி ரத்தோட், சமீபத்தில் தன் மனைவியிடம் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பேசுகையில், தனது நிலை குறித்தும், சக மாலுமிகளின் நிலை குறித்தும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கோட்டா:

சைப்ரஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள துறைமுகத்தில் கப்பல் ஒன்று, ஒரு மாத காலமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கப்பலில் உள்ள 10 இந்திய மாலுமிகள் உள்பட 13 ஊழியர்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அத்யாவசிய தேவைகளுக்கு கூட அவர்களை கப்பலில் இருந்து இறங்க விடாமல் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சார்மேஷ் சர்மா இத்தகவலை வெளியிட்டதுடன், இந்திய மாலுமிகளை மீட்பதற்கு மத்திய அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்மா மேலும் கூறியதாவது:-

கப்பலில் சிக்கித் தவிக்கும் மாலுமிகளில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த சஞ்சீவ் சிங் ரத்தோட்டும் ஒருவர். அவர் சமீபத்தில் தன் மனைவியிடம் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பேசுகையில், தனது நிலை குறித்தும், சக மாலுமிகளின் நிலை குறித்தும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். போதிய உணவு கிடைக்கவில்லை என்றும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறி உள்ளார். 

கடைசியாக ரத்தோட்டின் மனைவி சனிக்கிழமை பேசி உள்ளார். அப்போது, துறைமுக அதிகாரிகள் தங்கள் செலபேன் நெட்வொர்க் மற்றும் இணையதள இணைப்பை துண்டிக்கப்போவதாக மனைவியிடம் ரத்தோட் கூறியிருக்கிறார். மேலும், கப்பலில் இருந்து இறங்க அனுமதிக்கவில்லை என்றும், லிபியாவில் போர் நடைபெறும் பகுதிக்கு கப்பலை கொண்டு செல்வதற்கு கட்டாயப்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ரத்தோட்டின் மனைவி தொடர்ந்து முறையிட்டும் சரியான பதில் இல்லை. எனவே இந்திய மாலுமிகளை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு காங்கிரஸ் தலைவர் சர்மா கூறினார்.

Tags:    

Similar News