உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அவினாசியில் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பீதி

Published On 2022-01-27 09:15 GMT   |   Update On 2022-01-27 09:15 GMT
செயினை பறித்து சென்றவரின் மோட்டார் சைக்கிள் எண்ணை கவனித்து சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவினாசி:

அவிநாசி, அபிராமி கார்டன் பகுதியை  சேர்ந்தவர் ஜெயலட்சுமி(வயது 34). அம்மாபாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்துவந்தார். கடந்த, 24-ந் தேதி இரவு பணி முடித்து, தனது சகோதரர் ராஜா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

இரவு 8.30 மணிக்கு மடத்துப்பாளையம் பிரிவு பகுதியில் வந்த போது அவர்களுக்கு பின் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், ஜெயலட்சுமியின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து சென்றார். இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழ  ஜெயலட்சுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். செயினை பறித்து சென்றவரின் மோட்டார் சைக்கிள்  எண்ணை கவனித்து சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் அவிநாசி நியூ டவுன் பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பது தெரியவந்தது.

செயின் பறிப்பு நடத்த தினத்தன்று, அவரும் அவரது நண்பரும்  ரங்கா நகர் 'டாஸ்மாக்' மதுக்கடை எதிர்புற ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, கடைக்கு சென்று திரும்பிய போது, திருடப்பட்டிருப்பது தெரிந்தது. அவரிடமிருந்து திருடிய  மோட்டார் சைக்கிள் மூலம் தான் மர்ம நபர் செயின் பறிப்பு செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது  தெரிய வந்தது.

அனுப்பர்பாளையம் சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர் சக்குபாய்(70), நேற்று முன்தினம் தனியார்மருத்துவமனைக்கு செல்ல, அவிநாசிலிங்கம்பாளையம் பஸ்நிறுத்தத்தில் இறங்கி, நடந்து சென்றார். அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், சக்குபாய் அணிந்திருந்த செயினை பறித்து தப்பினார்.

இதுகுறித்தும் அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அடுத்தடுத்து  நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் அவிநாசி பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News