செய்திகள்
கரூர் அருகே ராயனூர் சாலையில் மரங்களை போட்டு மறியலில் ஈடுபட்டபொதுமக்களை படத்தில் காணலாம்.

கரூர் அருகே குடியிருப்பை சுற்றி தேங்கிய மழைநீர்: சாலையில் மரங்களை போட்டு பொதுமக்கள் மறியல்

Published On 2020-11-19 10:09 GMT   |   Update On 2020-11-19 10:09 GMT
கரூர் அருகே குடியிருப்பை சுற்றி தேங்கிய மழைநீரை கண்டித்து சாலையில் மரங்களை போட்டு பொதுமக்கள் மறியல் ஈடுபட்டனர்.
கரூர்:

கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் கரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. கரூர் அருகே உள்ள சுக்காலியூர், ராயனூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழைநீர் வழிந்தோடி திருமாநிலையூரில் இருந்து ராயனூர் செல்லும் சாலை வழியே உள்ள சிறு பாலத்தை கடந்து செல்லும். ஆனால் இந்த சிறு பாலத்தின் அடியில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மழைநீர் செல்ல வழியின்றி சாலை ஓரங்களில் உள்ள நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம்போல் சூழ்ந்து நின்றது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் திருமாநிலையூரில் இருந்து ராயனூர் செல்லும் சாலையில் மரங்களை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த சிறு பாலத்தில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து நகராட்சி ஊழியர்கள் பாலத்தில் உள்ள அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் கொடுமுடி -பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் பாலத்துறை உள்ளது. அதன் அருகே தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்நிலையில் பாலத்துறைக்கும் தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையே செல்லும் சாலையின் ஓரத்தில் வழி நெடுகிலும் உள்ள குழியில் நேற்றுமுன்தினம் மதியம் முதல் இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக தண்ணீர் அதிகளவு தேங்கி நிற்கிறது. அந்த வழியாக செல்லும் பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் செல்லும்போது அதே பாதையில் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் மீது பஸ், லாரி, கார், வேன்களின் சக்கரங்கள் மழை நீரில் பட்டு இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை தொடர்ந்து மூழ்கடித்து வருகிறது.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் மலர்விழி உடனடி தக்க நடவடிக்கை எடுத்து நெடுஞ்சாலை ஓரத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி அந்த குழியை மண்னை கொண்டு சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News