செய்திகள்

காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கைக்கு இந்தியா ரூ.294 கோடி நிதி உதவி

Published On 2018-01-13 21:12 GMT   |   Update On 2018-01-13 21:12 GMT
இலங்கையின் வடக்குப்பகுதியில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.294 கோடி) நிதி உதவியாக அளிக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியான ‘எக்சிம்’ வங்கியின் நிர்வாக இயக்குனர் டேவிட் ரஸ்குயின்ஹா, இலங்கை நிதி அமைச்சகத்தின் கருவூல செயலாளர் சமரதுங்கா இருவரும் அண்மையில் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது இந்தியா-இலங்கை இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

அதன்படி, இலங்கையின் வடக்குப்பகுதியில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டாலர்களை(சுமார் ரூ.294 கோடி) நிதி உதவியாக அளிக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இந்த துறைமுகத்தை முழுமையான வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும், பிராந்திய கடற்பகுதி துறைமுகங்களில் காங்கேசன்துறை துறைமுகத்தை இணைக்கும் விதமாக இந்த உதவியை இந்தியா அளிக்க முன்வந்துள்ளது.

இதுபற்றி மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இலங்கையின் முன்னேற்றத்தில் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டை எதிரொலிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது’ என்று கூறப்பட்டு உள்ளது.

காங்கேசன்துறை துறைமுகம் மேம்படுத்தப்படும்போது, யாழ்ப்பாண தீபகற்பம் உள்ளிட்ட இலங்கையின் இதர பகுதிகளையும், இந்தியாவையும் இணைக்கும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News