செய்திகள்
பெரியவளையம் கிராமத்தில் தைலமரக்காட்டில்துணிமணிகள், பைகள் சிதறிக்கிடந்த காட்சி.

ஜெயங்கொண்டம் அருகே ரெயில் என்ஜின் டிரைவர் வீட்டில் திருட்டு முயற்சி

Published On 2021-01-11 02:49 GMT   |   Update On 2021-01-11 02:49 GMT
ஜெயங்கொண்டம் அருகே ரெயில் என்ஜின் டிரைவர் வீட்டில் திருட்டு முயற்சி நடந்துள்ளது. பீரோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததால் 60 பவுன் நகைகள் மற்றும் பணம் தப்பியது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியவளையம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழழகன். இவருக்கு சுசீலா(வயது 39) என்ற மனைவியும், அபிநயா(13) என்ற மகளும், பாரதிவேலன்(9) என்ற மகனும் உள்ளனர். தமிழழகன் சென்னையில் ெரயில்வே துறையில் என்ஜின் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெரியவளையத்திற்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொண்ட தமிழழகன், அங்குள்ள வீட்டை பூட்டிவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று காலை தமிழழகனின் மாமியார் கொடிஞானம், அந்த வீட்டிற்கு வந்து பார்த்தபோது துணிகள் கலைந்து கிடந்ததோடு, நகைகள் இருந்த கவர் மற்றும் பைகள் கீழே கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பீரோவில் இருந்த 60 பவுன் நகை மற்றும் ரூ.4 ஆயிரம் ஆகியவை திருட்டு போனதாக போலீசாரிடம் கொடிஞானம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கதவு, பீரோ உள்ளிட்டவற்றில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

அரியலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய் மலர், வீட்டின் பின்பக்கத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடி வயல்வெளி வழியாக அப்பகுதியில் உள்ள தைல மரக்காட்டிற்குள் சென்றது. அங்கு பைகள், துணிகள் சிதறிக்கிடந்தன. அங்கு சிறிது நேரம் சுற்றிவந்த மோப்ப நாய், அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு ஓடி வந்து படுத்துக்கொண்டது. இதையடுத்து போலீசார் வீட்டையும், பீரோவையும் சோதனையிட்டபோது பீரோவில் உள்ள கீழ் அறை ஒன்றில் துணிகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகை மற்றும் ரூ.4 ஆயிரம் ஆகியவை அப்படியே இருந்தன.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் இரவு தமிழழகனுடைய வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை மர்ம நபர்கள் உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் அதனை உடைக்க முடியாததால், பின்பக்கம் உள்ள கிரில் கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள், மரக்கதவை கடப்பாரையால் நெம்பி உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கிருந்த சிறிய பைகள் மற்றும் பீரோவை உடைத்து, அதில் இருந்த சிறிய பைகள், பெரிய பை, பெட்டி உள்ளிட்டவற்றை தூக்கிக்கொண்டு, சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள தைலமர காட்டிற்கு சென்று, அவற்றை பிரித்து பார்த்துள்ளனர். ஆனால் அதில் நகை மற்றும் பணம் போன்றவை இல்லாததால் அவர்கள் ஏமாற்றமடைந்து, அங்கிருந்து சென்றுள்ளனர். மேலும் அவர்கள் பதற்றத்தில் பீரோவின் கீழே உள்ள அறையில் இருந்த துணிகளை கலைத்து பார்க்காததால், 60 பவுன் நகை மற்றும் பணம் தப்பியுள்ளது, என்பது தெரியவந்தது.

இதையடுத்து நகை மற்றும் பணத்தை, கொடிஞானத்திடம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் ஒப்படைத்தார். மேலும் அவரிடம் நகைகளையும், பணத்தையும் வீட்டில் யாரும் இல்லாத சூழலில் அங்கு வைக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கியதோடு, வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும்போது போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்றும் அறிவுறுத்தினார். இந்த சம்பவத்தால் காலை முதல் மதியம் வரை பெரியவளையம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News