செய்திகள்
கொரோனா வைரஸ்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2021-07-31 10:03 GMT   |   Update On 2021-07-31 10:03 GMT
கொரோனா அதிகரித்தால் மக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் கொரோனா 3-வது அலை வராமல் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

நெல்லை:

தமிழகத்தில் 2 மாதங்களுக்கு மேலாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த இருநாட்களாக மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது.

இந்நிலையில் கொரோனா 3-வது அலை வராமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். சென்னையில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் மக்கள் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோல தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களிலும் நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை.படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் சில இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இதனால் இந்த இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

நெல்லை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க நான்கு மண்டலங்களிலும் 12 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மார்க்கெட், கடைவீதிகள், மக்கள் கூடும் இடங்களில் அதிரடி சோதனை நடத்தி முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கும், சமூக விலகலை கடைபிடிக்காமல் இருப்பவர்களுக்கும் அபராதம் விதித்து வருகிறார்கள்.

தற்போது குறைந்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதை அதிகரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் மக்கள் கூடும் இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் குழுவினர் கூடுதல் சோதனை செய்து வருகிறார்கள்.

முக்கிய கடைகளிலும் ஆய்வு நடத்தி வருகிறார்கள். ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தயவு தாட்சண்யமின்றி அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகளும் வாகனங்களில் முக கவசம் அணியாமல் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

இதுபோல நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள முக்கிய நகரங்களிலும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விதிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமலும் சமூக விலகலை கடை பிடிக்காமலும் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

இங்கும் கொரோனா அதிகரித்தால் மக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் கொரோனா 3-வது அலை வராமல் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News