செய்திகள்
மதுபானங்கள்

தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்கிறது

Published On 2021-07-17 08:17 GMT   |   Update On 2021-07-17 08:17 GMT
மதுபானங்கள் விலையை அரசு உயர்த்த உள்ளதால் பழைய விலை மது பானங்களை விற்பனை செய்து முடிக்க அனைத்து கடை மேற்பார்வையாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தபட்டதை தொடர்ந்து கடந்த மாதம் மதுக்கடைகள் படிப்படியாக திறக்கப்பட்டன.

அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. பின்னர் அந்த மாவட்டங்களிலும் திறக்கப்பட்டன.

மதுக்கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டதோடு மாற்றப்பட்டு உள்ளன. பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு மூடப்பட்டு வந்த மதுக்கடைகள் தற்போது காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மூடப்படுகிறது.

இதனால் டாஸ்மாக்
நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்படாத வகையில் டாஸ்மாக் கடைகளும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே தற்போது செயல்படுகின்றன.

மதுக்கடைகள் திறக்கப்பட்ட போதிலும் இன்னும் பார்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் குறிப்பிட்ட அளவு விற்பனை குறைந்துள்ளது.



மதுபானங்களை வாங்கி சென்று வெளி இடங்களில் வைத்து குடிக்கும் பழக்கம் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அதிகரித்துள்ளது. 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக எதிர்பார்த்த வருவாயை ஈட்ட முடியவில்லை.

டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதை தவிர்க்க மதுபானங்கள் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு காலத்தில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டது. அது போல தற்போதும் உயர்த்துவதற்கு திட்டமிட்டு உள்ளனர். குறைந்த ரக மதுவகைகளுக்கு 10 ரூபாயும், நடுத்தர ரக மதுபானங்களுக்கு 30 ரூபாயும், உயர்ரக மதுபானங்களுக்கு 50 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுபானங்களின் விலை உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் குடோன்களில் தேங்கியுள்ள மதுபானங்களை விற்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

ஊரடங்கிற்கு முன்பு கிடங்குகளில் விற்காமல் இருந்த 90 நாட்களுக்கு மேலான மதுபானங்களை மட்டுமே சில்லரை விற்பனைக்கு அனுப்பி வருகிறார்கள்.

பிரிமீயம் எனப்படும் பழைய மதுபானங்களை விற்பனை செய்யப்பட வேண்டும் என கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறைந்த விலை மதுபானங்கள் விற்று தீர்ந்துவிட்டன. 200 ரூபாய்க்கு மேல் உள்ள மதுபானங்களை கட்டாயமாக விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

விரைவில் மதுபானங்கள் விலையை அரசு உயர்த்த உள்ளதால் பழைய விலை மது பானங்களை விற்பனை செய்து முடிக்க அனைத்து கடை மேற்பார்வையாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறும்போது, கொரோனா பாதிப்பு காரணமாக மது தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளது. தற்போது வாரத்திற்கு குறிப்பிட்ட அளவு மதுபானங்களை மட்டுமே அனுப்புகிறார்கள்.

இதனால் அதிகமாக விற்பனையாகும் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.

மதுபானங்களின் விலை அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதை தொடர்ந்து தமிழகத்திலும் விரைவில் உயர்த்தப்பட உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்பு இந்த விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Tags:    

Similar News