செய்திகள்
எம்எஸ் டோனி

டெல்லி ஆடுகளம் ஆச்சரியம் அளித்தது - சிஎஸ்கே கேப்டன் டோனி

Published On 2021-04-29 06:52 GMT   |   Update On 2021-04-29 06:52 GMT
தோல்விக்கு நானே முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன் என சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணி ஐதராபாத்தை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது.

டெல்லியில் நடந்த 23-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணிக்கு 172 ரன் இலக்காக இருந்தது.

மனிஷ் பாண்டே 46 பந்தில் 61 ரன்னும் (5பவுண்டரி, 1 சிக்சர் ), கேப்டன் டேவிட் வார்னர் 55 பந்தில் 57 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். நிகிடி 2 விக்கெட்டும், சாம் கரண் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 9 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 172 ரன் இலக்கை எளிதில் எடுத்தது. அந்த அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்தில் 75 ரன்னும் (12 பவுண்டரி), டுபெலிசிஸ் 38 பந்தில் 56 ரன்னும் (6 பவுண்டரி,1 சிக்சர்) எடுத்தனர். ரஷீத்கான் 3 விக்கெட் கைப்பற்றினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 5 -வது வெற்றியாகும். இந்த 5 வெற்றியையும் தொடர்ச்சியாக பெற்று சாதித்தது. இதன் மூலம் சி.எஸ்.கே. மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியது.‌

இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதா வது:-

எங்களது பேட்டிங் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் அதற்காக பந்துவீச்சு நன்றாக இல்லை என்பது அர்த்தமில்லை.

டெல்லி ஆடுகளம் ஆச்சரியமளிக்கும் வகையில் சிறப்பாக இருந்தது. இதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. இதற்கு முன்பு இங்குள்ள பிட்ச் இப்படி இருந்ததில்லை. பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது‌. பனித்துளிகள் எதுவுமில்லை.

தொடக்க ஜோடியின் பார்ட்னர்ஷிப் மிகவும் பிரமாதமாக இருந்தது. கடந்த சீசனில் அப்படி அமையவில்லை. நீண்ட நாள் தனிமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அப்போது இருந்தது.

இந்த சீசனில் வீரர்கள் அதிக பொறுப்பை ஏற்று உள்ளனர். கடந்த 8 முதல் 10 ஆண்டாக பார்த்தால் நாங்கள் அணியில் இருந்து வீரர்களை மாற்றவில்லை. வாய்ப்பு கிடைக்காத வீரர்களையும் நாங்கள் பாராட்டி உள்ளோம்.

நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். வீரர்களின் அறை சிறப்பாக இருப்பது முக்கியமானது. விளையாடாத வீரர்களுக்கு கூடுதலாக பாராட்டுக்களையும் நாங்கள் தெரிவிப்பது அவசியமாகும்.

இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

ஐதராபாத் அணி 5-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் வார்னர் கூறும்போது, “தோல்விக்கு நானே முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். என்னால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. சி.எஸ்.கே. அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது” என்றார்.

சி.எஸ்.கே. அணி 7-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சுடன் வருகிற 1-ந் தேதி மோதுகிறது. ஐதராபாத் அடுத்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 2-ந் தேதி சந்திக்கிறது. 


Tags:    

Similar News