ஆன்மிகம்
அக்னி தீர்த்த கடற்கரையில் பூஜை செய்த பக்தர்களை படத்தில் காணலாம்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ராமேசுவரத்தில் குவியும் பக்தர்கள்

Published On 2021-09-24 04:58 GMT   |   Update On 2021-09-24 08:45 GMT
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி ராமேசுவரத்தில் திதி மற்றும் தர்ப்பண பூஜை செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாகவும், 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும் உள்ளது. காசிக்கு நிகரானது எனவும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

ராமேசுவரம் வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைவதாக நம்பப்படுகின்றது. இங்கு ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு பூஜை செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

இந்த நிலையில் ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களை போன்று புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை மிகவும் விசேஷமானதாகும். முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்கு புரட்டாசி மாத பவுர்ணமியிலிருந்து அமாவாசை வருவதற்கு இடைப்பட்ட இந்த நாட்களில் திதி தர்ப்பண பூஜை செய்து வழிபாடு நடத்துவது மிகவும் உகந்த நாட்களாக கூறப்படுகிறது. புரட்டாசி பவுர்ணமிக்கும், அமாவாசைக்கும் இடைப்பட்ட நாட்களை பட்சம் என அழைக்கிறார்கள்.

இந்த ஆண்டுக்கான புரட்டாசி மகாளய பட்சம் கடந்த 21-ந் தேதியிலிருந்து தொடங்கியுள்ளது. வருகிற 6-ந் தேதி அமாவாசை வரையிலும் மகாளய பட்சம் நடைபெறுகிறது.

இதன்காரணமாக ராமேசுவரத்தில் புனித நீராடி திதி தர்ப்பண பூஜை செய்ய தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் கடந்த 2 நாட்களாகவே ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இதுகுறித்து ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பூஜை செய்யும் புரோகிதர் சுந்தரேசன் கூறியதாவது:-

புரட்டாசி மாதம் வரக்கூடிய பவுர்ணமியிலிருந்து அமாவாசை வரை இந்த 15 நாட்கள் மிக விசேஷமான நாட்கள் ஆகும். இந்த நாட்கள் முன்னோர்கள் நேரடியாக பூமியில் சஞ்சரிப்பதாக நம்பப்படுகின்றது. அதனால் புரட்டாசி மாதத்தில் பவுர்ணமி வந்த நாளிலிருந்து அமாவாசை முடிவடைவதற்குள் எந்த நாட்களில் திதி தர்ப்பண பூஜை செய்து வழிபாடு நடத்தினாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம். இந்த மகாளய பட்சம் நடைபெறும் நாட்களில் கடலில் புனித நீராடி திதி தர்ப்பணம் பூஜை செய்யும் பட்சத்தில் குடும்பத்தில் தவறிய அனைவருக்கும் சேர்த்து பூஜை செய்வதற்கு ஈடான பலனாகும்.

அதனால்தான் ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களை போன்று புரட்டாசி மாதத்தில் பவுர்ணமி முதல் அமாவாசை வரையிலான இந்த இடைப்பட்ட நாட்களில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் வந்து புனித நீராடி முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பண பூஜை செய்துவிட்டு செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

புரோகிதர் ரமணி கூறுகையில், முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும், அவர்களுக்கு உணவு அளிப்பதற்காக பச்சரிசி மாவால் பிண்டம் செய்து பூஜை செய்து வழிபாடு நடத்தி அதன் பின்னர் கடலில் கரைக்கப்படுகிறது. முன்னோர்களின் வருட நாள் அல்லது இறந்துபோன நபர்களின் தேதி நாள் தெரியாவிட்டாலும் இந்த புரட்டாசி மாதத்தில் மகாளய பட்சத்தில் இந்த 15 நாளில் எந்த நாளில் பூஜை செய்தாலும் மிகவும் உகந்த நாளாகும். திதி பூஜை என்பது பிண்டம் செய்து கடலில் கரைத்து முன்னோர்களை நினைத்து அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி வழிபாடு செய்வது. தர்ப்பணம் என்பது கடற்கரையில் அமர்ந்து எள் வைத்து பூஜை செய்த பின்னர் அந்த எள்ளை கடலில் கரைத்து வழிபாடு நடத்துவது ஆகும். ஒவ்வொரு பிண்டம் ஒவ்வொரு தலைமுறையினரை குறிப்பது. ராமேசுவரத்தை பொறுத்தவரையில் 4 அல்லது 5 பிண்டம் வைத்து பூஜை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News