செய்திகள்
ஷகிப் அல் ஹசன்

ஷகிப் அல்-ஹசனுக்கு இன்னும் கடுமையான தண்டனை வழங்கியிருக்க வேண்டும் - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து

Published On 2019-10-31 04:59 GMT   |   Update On 2019-10-31 04:59 GMT
வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசனுக்கு இன்னும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

சூதாட்ட தரகர் அணுகியதை தெரிவிக்காததால் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசனுக்கு இன்னும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

வங்காளதேச டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனும், உலகின் ‘நம்பர் ஒன்’ ஆல்-ரவுண்டருமான ஷகிப் அல்-ஹசனை, இந்தியாவை சேர்ந்த சூதாட்ட தரகர் தீபக் அகர்வால் 2017-ம் ஆண்டு முதல் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது அம்பலமானது. ஆடும் லெவன் அணி குறித்த விவரம் மற்றும் ஆட்ட வியூகம் பற்றிய பல்வேறு தகவல்களை சூதாட்ட தரகர் கேட்டு இருக்கிறார். இருவருக்கும் இடையிலான ‘வாட்ஸ்-அப்’ உரையாடலை கண்டுபிடித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவினர், ஷகிப் அல்-ஹசனிடம் விசாரணை நடத்தினர். அப்போது சூதாட்ட தரகர் தன்னை தொடர்பு கொண்டதை தெரிவிக்காமல் மறைத்தது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து ஷகிப் அல்-ஹசன் 2 ஆண்டுகள் விளையாட தடை விதித்து ஐ.சி.சி. நேற்று முன்தினம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதில் முதல் ஒரு ஆண்டு அவர் எந்த போட்டியிலும் பங்கேற்க முடியாது. அடுத்த ஒரு ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்ட தண்டனையாகும். முதல் ஆண்டில் ஷகிப் அல்-ஹசனின் நடத்தையை பொறுத்து நிறுத்தி வைக்கப்பட்ட தண்டனையில் தளர்வு செய்யப்படும்.

ஷகிப் அல்-ஹசன் மீதான தடையை முன்னாள் வீரர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பதிவில், ‘ஷகிப் அல்-ஹசன் மீது எனக்கு எந்தவித அனுதாபமும் இல்லை. இந்த காலகட்டத்தில் வீரர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து எல்லா நேரங்களிலும் எடுத்து சொல்லப்படுகிறது. ஏதாவது நடந்தால் அது குறித்து உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என்பதும் வீரர்களுக்கு தெரியும். அப்படி இருக்கையில் தன்னை சூதாட்ட தரகர் அணுகிய தகவலை தெரிவிக்காத ஷகிப் அல்-ஹசனுக்கு 2 ஆண்டு தடை விதித்தது போதாது. இன்னும் கடுமையாக நீண்ட கால தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். யார் என்ன சொன்னாலும், ஊழலை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். விதியை பின்பற்றாவிட்டால் விளைவுகளை சந்திக்க தான் வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ்ராஜா கருத்து தெரிவிக்கையில், ‘ஷகிப் அல்-ஹசன் தடை எல்லா விளையாட்டு ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் ஒரு பாடமாகும். நீங்கள் ஆட்டத்தை அவமதிப்பதுடன், கிரிக்கெட்டை விட தன்னை பெரிய ஆளாக காட்ட முயற்சிக்கும் வகையில் விதிமுறையை மதிக்காமல் செயல்பட்டால் பெரிய சரிவை தான் சந்திக்க நேரிடும்’ என்றார்.

ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் தனது டுவிட்டர் பதிவில், ‘வீரர்களுக்கு பல முறை ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவினர் விதிமுறையை எடுத்து சொல்லிய பிறகும் ஷகிப் அல்-ஹசன் தன்னை தரகர் அணுகிய விஷயம் குறித்து தகவல் தெரிவிக்காதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஷகிப் அல்-ஹசன் விவகாரம் குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் அளித்த பேட்டியில், ‘ஷகிப் அல்-ஹசனிடம் ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணை குறித்து எனக்கோ? வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த வேறு யாருக்குமோ? முன்கூட்டியே தெரியாது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஜனவரி மாதத்தில் இருந்தே இந்த விசாரணை நடைபெற்று இருக்கிறது. ஊழல் தடுப்பு பிரிவு தனிப்பட்ட அமைப்பாகும். ஷகிப் அல்-ஹசனிடம் மட்டுமே விசாரணை குறித்து பேசி இருக்கின்றனர். இந்த விஷயத்தை மூன்று நாட்களுக்கு முன்பு தான் அவர் என்னிடம் தெரிவித்தார். ஷகிப் அல்-ஹசன் இடத்தை நிரப்ப தகுதியான வீரர் எங்களிடம் கிடையாது. உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான அவர் விளையாட முடியாமல் போனது உண்மையிலேயே எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் இந்தியாவில் முதல்முறையாக முழுமையான போட்டித் தொடரில் விளையாட இருக்கிறோம். அத்துடன் இந்த போட்டி தொடரில் இருந்து தான் எங்களுடைய டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்குகிறது. ஷகிப் அல்-ஹசனை மனதில் வைத்து தான் இந்த தொடருக்கான எல்லா திட்டங்களையும் நாங்கள் வகுத்து இருந்தோம்’ என்று தெரிவித்தார்.

வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வாளருமான ஹபிபுல் பஷர் கூறுகையில், ‘முதிர்ச்சியான ஒரு கிரிக்கெட் வீரரான ஷகிப் அல்-ஹசன் சூதாட்ட தரகர் அணுகியதை ஐ.சி.சி.யிடம் தெரிவிக்கவில்லை என்பதை நம்ப கடினமாக இருக்கிறது. இது எனக்கு அதிர்ச்சி அளிப்பதுடன், வங்காளதேச கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். தடை காலம் முடிந்து அவர் மீண்டும் களம் திரும்பி பழைய ஆட்ட நிலையை எட்டுவது என்பது மிகவும் கடினமானதாகும்’ என்றார்.

இதற்கிடையே, சூதாட்ட சர்ச்சையால் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஷகிப் அல்-ஹசன், கிரிக்கெட் விதிகளை வகுப்பதில் தாயகமாக விளங்கும் மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் (எம்.சி.சி.) உலக கிரிக்கெட் கமிட்டியில் இருந்து விலகி இருக்கிறார். முன்னாள், இன்னாள் வீரர்கள் மற்றும் நடுவர்களை உள்ளடக்கிய இந்த கிரிக்கெட் கமிட்டியில் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து ஷகிப் அல்-ஹசன் அங்கம் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News